பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ வழியில்லை!

261

அன்புடன் இறுகத் தழுவி ஆனந்தபாஷ்யம் சொரிய வேண்டுமென்றும் அந்தச் சக்தி எங்களைத் தூண்டிவந்தது.

இந்தத் தூண்டுதலினால், ஒரு முறை அவளை என் வீட்டுக்கு வா என்று நான் துணிந்து அழைத்துவிட்டேன்!

அவள் வந்தாள்; வாசலில் நின்றாள். நான் அவளைப் பார்த்தேன்; அவள் என்னைப் பார்த்தாள். நான் புன்னகை புரிந்தேன்; அவளும் புன்னகை புரிந்தாள்.

அந்த ஒரு கணத்திற்குப் பிறகு....? அப்பா பார்த்துவிட்டால்...? அண்ணா பார்த்து விட்டால்...? அம்மா பார்த்து விட்டால்....? அக்கா பார்த்துவிட்டால்....?

இப்படி அடுத்தடுத்துப் பல கேள்விகள் அடுக்கடுக்காக என் உள்ளத்தில் எழுந்தன. அவ்வளவுதான்; என் கண்களில் பீதி நிறைந்தது; கால்கள் தரையில் பாவவில்லை; தடுமாறின.

ஏன் இந்த நடுக்கம்? அப்பா, அம்மா, அண்ணா, அக்கா எல்லோரும் என்னுடைய ஜன்ம விரோதிகளா, என்ன? - விரோதிகள் இல்லையென்றால் எனக்குப் பிடித்தமான அவளை என் வீட்டுக்குள் அழைக்க என்னால் ஏன் முடியவில்லை?

இந்நிலையில் ஆவலுடன் என்னிடம் ஏதோ சொல்லத் துடித்த அவள், அசடு வழியும் என் முகத்தைக் கண்டதும் திடுக்கிட்டு நின்றாள்!

நானோ எப்படியாவது ராஜ விழி விழிப்பதென்று தீர்மானம் செய்து கொண்டு, அதற்காகப் பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தேன்.

முடியவில்லை; அவள் திரும்பிப் போனாள்!

★ ★ ★

அடுத்தபடி, எனக்கென்று நான் தனியாக எங்கேயாவது ஒரு அறையை வாடகைக்கு அமர்த்திக் கொள்வதென்றும், அந்த அறைக்கு அடிக்கடி அவள் வந்து என்னைச் சந்தித்துவிட்டுச் செல்வதென்றும் எங்களுக்குள் தீர்மானமாயிற்று. அதன்படியே நானும் படாத பாடுபட்டு ஓர் அறையை வாடகைக்குப் பிடித்தேன்.

அவள் வந்தாள்; எனக்கு எதிரேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.