பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

விந்தன் கதைகள்

நான்கதவைச்சாத்தித் தாளிடப் போனேன்.

"பிறருடைய கவனத்தைக் கவருவதற்கு வேறு வினை வேண்டியதில்லை!” என்றாள்.அவள்.

எனக்கும் அது உண்மையாகப் பட்டது. கதவைத் தாளிடாமல் வெறுமனே சாத்திவிட்டு வந்து உட்கார்ந்து, அவளுடைய மிருதுவான கரத்தை மெல்லப் பற்றினேன்.

அவள் என் உடலையும் உயிரையுமே தன் வசப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு மந்திரச் சிரிப்பால் என்னைக் காந்தம்போல் இழுத்தாள்.

நான், அவளுடைய கரத்தைக் கொஞ்சம் அழுத்திப் பிடித்து, "அப்பா! இதற்காக நாம் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது!" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டேன். அதற்குள், "என்னடா, கதவைச் சாத்திக் கொண்டு...?" என்று கேட்டுக்கொண்டே, எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தான் என் நண்பன் நாராயணன்.

இருவரும் திடுக்கிட்டு அவனைத் திரும்பிப் பார்த்தோம்.

"ஓ!" என்று அவன் ஒரு தினுசாக நீட்டி முழக்கிக் கொண்டே வெளியே சென்றான். அவன் வெளியே சென்றதும் ‘களுக்’ என்ற சிரிப்பொலி எங்கள் காதில் விழுந்தது.

"என்னுடைய நண்பன் எப்படிப்பட்டவன், தெரியுமா? கோயபெல்ஸின் திரு அவதாரம்!" என்றேன் நான்.

"பார்த்தாலே தெரிகிறதே! இங்கிலீஷ்காரனிடமிருந்து ஹாட்டும் சூட்டும் போடக் கற்றுக்கொண்ட மனுசன், அவனிடமிருந்து கொஞ்சம் ஒழுங்கும் கற்றுக் கொண்டிருக்கக் கூடாதோ?" என்றாள்.அவள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. "அது என்ன ஒழுங்கு?" என்று கேட்டேன்.

"இங்கிலீஷ்காரன் இப்படியா ‘திடுதிப் என்று பிறத்தியாருடைய அறைக்குள் நுழைவான்? கதவைத் தட்டிக் கொண்டு வெளியிலே அல்லவா நிற்பான்? உள்ளேயிருப்பவர்கள் ‘வா என்று சொல்வதற்கு முன்னால் அவன் வரவே மாட்டானே!” என்றாள் அவள்.