பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எத்தனை பேரோ!

நீங்கள் 'கஸ்தூரி பவ'னத்துக்குச் சென்றிருந்தால் அங்கே பெரியசாமியையும் சின்னச்சாமியையும் பார்த்திருக்கலாம். இரவிலும் பகலிலுமாக இருவரும் அந்தப் பங்களாவைக் காவல் காத்து வருபவர்கள். ஒருவாரம் பெரியசாமி பகலில் காவல் காத்தால், இன்னொரு வாரம் சின்னச்சாமி இரவில் காவல் காப்பான். இப்படியே இருவரும் அந்தக் கஸ்தூரி பவனத்தை மாறி மாறிக் காவல் காத்து வந்தார்கள்.

பகலில் காவல் காப்பவன் காலை ஆறு மணிக்கே பங்களாவுக்கு வந்துவிட வேண்டும். அதற்குப் பிறகு இரவு எட்டு மணிக்குத்தான் அவன் வீட்டுக்குச் செல்ல வேண்டும். இரவில் காவல் காப்பதற்காக எட்டு மணிக்கு வருபவன் காலை ஆறு மணிக்குத்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும். மத்தியில் அவர்கள் இருவரும் அந்தப் பங்களாவின் வாயிலை விட்டு அப்படி இப்படி நகரக்கூடாது, நின்றது நின்றபடி நிற்கவேண்டும். ஒருமாதம் இரண்டு மாதங்கள் அல்ல; ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல; எத்தனையோ நாட்களாக, எத்தனையோ மாதங்களாக, எத்தனையோ வருடங்களாக நின்று வருகிறார்கள்.

அந்தப் பங்களாவில் வேலை பார்க்க வந்தபோது பெரியசாமிக்கு வயது இருபத்திரண்டு; சின்னசாமிக்கு வயது இருபது. இன்று அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட அறுபதாவது வயதை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் கஸ்தூரி பவனத்தின் வாயிலில் அவர்கள் இன்றுவரை உட்காரவில்லை!

அரிதினும் அரிதான மானிடப் பிறவி எடுத்த அவர்கள் இருவரும், பகலில் வேலை செய்யும்போது இரவில் தூங்குவார்கள்; இரவில் வேலை செய்யும் போது பகலில்துங்குவார்கள். இதைத் தவிர அவர்கள் வேறொன்றும் அறியாதவர்கள். அறிவதற்கு வேண்டிய அவகாசமும் அவர்களுக்குக் கிடையாது

காலைக் கதிரவனின் பொன்னிறக் கிரணங்களிலோ, மாலைக் கதிரவனின் செந்நிறக் கிரணங்களிலோ அவர்கள் தங்கள் கருத்தைச் செலுத்துவதில்லை; வெண்ணிலவின் தண்ணொளியிலும் அவர்கள் தங்கள் மனதைப் பறிகொடுப்பதில்லை; முடிவில்லாத வானத்தில் தவழ்ந்து விளையாடும் மேகக் கூட்டங்களைக் கண்டோ, சுடர்விட்டு