பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எத்தனை பேரோ!

267

ஒளிரும் நட்சத்திரக் குழுவைக் கண்டோ அவர்கள் மகிழ்வதில்லை; வானளாவிய மரங்களும் மலைகளும் அவர்களுடைய கவனத்தைக் கவருவதில்லை; அதிகாலையில் கேட்கும் பட்சி ஜாலங்களின் உதயகீதமும், அர்த்தராத்திரியில் கேட்கும் ஆந்தையின் அலறலும், ஓயாத ஒழியாத கடல் அலைகளின் பேரிரைச்சலுங்கூட அவர்கள் காதில் விழுவதில்லை!

"ஹிட்லர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா?" "மூன்றாவது உலக மகா யுத்தம் எப்பொழுது வரும்?" "உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு மந்திரிமார்கள் இன்னும் எத்தனை அறிக்கைகள் விட வேண்டும். எத்தனை பிரசங்கங்கள் செய்யவேண்டும்?" "நகரசுத்தித் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்வதற்கும், அதிகாரிகள் அவர்களுடைய குடிசைகளைப் பிய்த்து எறிவதற்கும் என்ன சம்பந்தம்?" "விதவா விவாகம் வேண்டுமென்று புருஷர்கள் என்னதான் கரடியாய்க் கத்தினாலும் பெண்கள் ஏன் மெளனம் சாதிக்கிறார்கள்?" - இம்மாதிரி பிரச்சனைகளுக்கும், பெரியசாமி - சின்னசாமிக்கும் ரொம்ப ரொம்ப தூரம்!

இவற்றையெல்லாம் பார்க்கும்போது ‘கஸ்தூரி பவனத்தைக் காவல் காக்கத்தானா இவர்கள் பிறந்தார்கள்?’ என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறதல்லவா? அதுகூட அவர்களுக்குத் தோன்றுவதில்லை!

இன்னும் சொல்லப் போனால் "நாம் ஏன் பிறந்தோம், எதற்காக உயிர் வாழ்கிறோம்?" என்று கூட அவர்கள் சிந்திப்பதில்லை. அதற்கு வேண்டிய நேரந்தான்.அவர்களுக்கு இல்லையோ, அல்லது மனந்தான் இல்லையோ யார் கண்டார்கள்?

* * *

டவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்றாலும் அவருடைய கடாட்சத்தை சிலர் தான் பெற முடிகிறதல்லவா? அப்படிப் பெற்றவர்களில் வைரவன் செட்டியாரும் ஒருவர். கஸ்தூரி பவனம் அவருடைய சொந்தப் பங்களாதான். இகவாழ்க்கையிலுள்ள சுகங்கள்.அத்தனையையும் அனுபவித்து அனுபவித்து அவர்அலுத்துப் போனவர். ஆனால் அதற்குப் பரலோகம் சென்று விடவும் அவர் விரும்பவில்லை. இத்தனைக்கும் இகலோகத்தைவிடப் பரலோகம் எத்தனையோ விதங்களில் சிறந்தது என்பதை அவர் அறிந்துதான் இருந்தார். தாம் அறிந்த அந்த உண்மையைப் பிறருக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டும் வந்தார். ஆனால் அவர்மட்டும் அந்த வழியைப்