பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன் கதைகள்

271

எங்கேயாவது தூங்குகிற காவற்காரனை எழுப்புவதுண்டா?" என்று எண்ணி அவன் குழம்பினான்.

“என்ன அண்ணே என்ன யோசிக்கிறே?” என்றான் திருடன்.

"இல்லை, நீ நிசமாவே திருடன்தானான்னு யோசிக்கிறேன்!” என்றான் பெரியசாமி.

"திருடன்தான் அண்ணே அதில் என்ன சந்தேகம்? இந்தத் தள்ளாத வயசிலே உறங்கி விழுந்துக் கிட்டே காவல் காக்கும் உன்னைக் கண்டதும், எனக்கு 'ஐயோ பாவம்'ன்னு இருந்திச்சு, உங்கிட்டே சொல்லாமப் போவானேன்னு, சொல்லிவிட்டுப் போலாம்னு எழுப்பினேன் - சரி நான் உள்ளேபோய் வரட்டுமா?” என்றான் திருடன்.

இதைக் கேட்டதும் பெரியசாமிக்குக் கோபம் கோபமாக வந்தது. அவன் சற்று நிமிர்ந்து நின்று "என்ன துணிச்சல்டா, உனக்கு? என்னையே கேட்டுக் கிட்டா உள்ளே நுழையப் பார்க்கிறே?” என்று தன் கையிலிருந்த தடியை ஓங்கினான்.

"டேய், சும்மா நிறுத்து உனக்கோ வயசாயிடிச்சு இன்னும் நீ ஏன் இந்த வேலையைக் கட்டிக்கிட்டு அழறே? பேசாம இருந்து நான் சொல்றதைக் கேளு - இன்னும் கொஞ்சநேரம் பொறுத்துக்கோ! அப்புறம் உனக்கு என்ன வேணுமோ, என்னைக் கேளு; நான் கொடுக்கிறேன், அதை வச்சிக்கிட்டுச் சாகிற காலத்திலாச்சும் நீ கொஞ்சம் சந்தோஷமாயிருக்கப் பாரு! - என்ன, எனக்கு உத்தரவுதானே?”

“நல்லாயிருக்குடா, நீ சொல்ற ஞாயம்! இத்தனை நாளா என் உசிரைக் காப்பாத்தி வந்த எசமானுக்கா என்னைத் துரோகம் செய்யச் சொல்றே?"

"என்னா, அண்ணே நீ கொஞ்சங்கூட விசயம் தெரியாமப் பேசறியே. எசமான் இத்தனை நாளா உன் உசிரை எதுக்காவக் காப்பாத்திக்கிட்டு வந்தாரு? - அவரு வீட்டை நாயாட்டம் காவல் காக்கத்தானே? நாலு பேரைப் போல நீயும் சந்தோஷமாவாழறத்துக்கு இல்லையே!”

"டேய், இந்த உபதேசமெல்லாம் எனக்கு வேணாம் ஒருநாளும் நான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்க மாட்டேன். நீ டிரியாதையா இந்த இடத்தைவிட்டுப் போறியா? - இல்லை, கூச்சல் போடட்டுமா?