பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

விந்தன் கதைகள்


"நானும் உன்னை மரியாதையாய்த்தான் கேட்டுக்கிறேன் - பேசாம நீ என்னை உள்ளே விட்றியா? - இல்லே உன் மென்னியைப் பிடித்துத் திருகிடட்டுமா?" என்று தன் கைகளைப் பெரியசாமியின் கழுத்துக்கு அருகே கொண்டு போனான் திருடன்.

"திருகுவேடா, திருகுவே! என்னை என்ன கிழவன்னு நினைச்சுக்கிட்டியா மரியாதையாய்ப் போடா, வெளியே!” என்று கத்திக்கொண்டே, அவன் கழுத்தில் கம்பை வைத்து நெட்டித் தள்ளினான் பெரியசாமி.

அவ்வளவுதான்; "வாழத் தெரியாத மனுஷனுக்கு வைகுண்டந்தான் சரி!" என்று சொல்லிக் கொண்டே திருடன் அவன் மென்னியைப் பிடித்து விட்டான்.

அடுத்த நிமிஷம் "எசமான் எசமான் திருடன் திருடன் என்று அலறிக் கொண்டே கீழே விழுந்தான் சாகத் தெரியாத பெரியசாமி.

அவனுடைய அலறலைக் கேட்டுச் செட்டியார் 'ரிவால்வர்’ சகிதம் எழுந்து ஓடி வருவதற்குள் திருடன் ஓடி விட்டான். அதுமட்டுமில்லை. பெரியசாமியின் உயிரும் அவன் உடலைவிட்டு ஓடி விட்டது.

"இதென்ன சங்கடம்! போயும் போயும் இவன் இங்கே விழுந்தா செத்துத் தொலைய வேண்டும்? இவன் உழைத்த உழைப்புக்கு “எங்களுக்கு ஏதாவது கொடு" என்று இவனுடைய பெண்டாட்டி பிள்ளைகளெல்லாம் வந்து என் கழுத்தை அறுக்குமே?" என்று எண்ணிக் கண்ணீர் வடித்தார் எதிர்கால மந்திரியான வைரவன் செட்டியார்.

அடுத்த கணம் அவருடைய கவனம் சின்னச்சாமியின் மீது சென்றது. ‘அவன் ஏன் இன்றிரவு வேலைக்கு வரவில்லை? அவனும் இவனைப்போல் செத்துத் தொலைந்தானோ? சனியன்கள் இரண்டு கிழங்களும் ஒரேயடியாய் ஒழிந்து தொலைந்தால் நம்மைப் பிடித்த பீடை விட்ட மாதிரி - ஆனால் வேறு யாராவது வந்தால் இவர்களைவிட அதிகச் சம்பளம் கேட்பார்களோ, என்னமோ - அதற்காகத்தானே இந்தக் கிழங்களே இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று இத்தனை நாளும் சும்மா இருந்தேன் என்று அவர் தமக்குள் அலுத்துக் கொண்டார். பிறகு, திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவர் போல் விடுவிடுவென்று ஓடி, போலீஸ் ஸ்டேஷனுக்கு “டெலிபோன் செய்தார். ‘வைர வியாபாரி வைரவன் செட்டியார்'