பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

விந்தன் கதைகள்

ஒரே சம்பளம் கொடுத்துக்கிட்டு வந்தீங்க!" என்று சொல்லிவிட்டு அவன் மெள்ளத் தலையை சொறிந்தான்.

சம்பள உயர்வு கேட்பதற்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் அவனுக்கு எங்கே கிடைத்திருக்கப் போகிறது?

ஆனால், அவன் எடுத்துக் காட்டிய வித்தியாசத்தைச் செட்டியார் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் அதையார் கேட்டார்? "செத்துப் போன பெரியசாமிக்குப் பெண்டாட்டி, பிள்ளை இருக்கிறதா, இல்லையா?” என்று தானே கேட்டார்? - "இல்லை" என்று தெரிந்ததும், “கவலை விட்டது, கடவுள் நம்முடைய பங்கில் இல்லாமலிருப்பாரா!" என்று தமக்குள் எண்ணி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.

அடுத்த நிமிஷம் அவருடைய முகம் மலர்ந்தது. "ஏலே, சின்னச்சாமி நாளைக்கு நம்ம பெரியசாமிக்குப் பதிலா வேறே ஒரு ஆளைப் பிடித்துக் கொண்டு வருகிறாயா?” என்று கேட்டார் உற்சாகத்துடன்.

இதைக் கேட்டதும் சின்னச்சாமிக்கும் உற்சாகம் பிறந்தது. "அதுக்கென்னங்க, நம்ம ஊரிலே ஆளுக்கா பஞ்சம்? வேண்டிய ஆளை நான் இழுத்துக்கிட்டு வரேனுங்க!" என்றான்.

"சரி, போய் 'கேட்'டண்டை நில்லு!" என்று சொல்லிவிட்டுச் செட்டியார் உள்ளே போய்விட்டார்.

சின்னச்சாமி பிழைத்தான்

பெரியசாமியைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை; செட்டியாருக்காகவே பிறந்தவன்போல் பிறந்து, செட்டியாருக்காகவே வளர்ந்தவன் போல் வளர்ந்து, செட்டியாருக்காகவே வாழ்ந்தவன் போல் வாழ்ந்து, செட்டியாருக்காகவே மடிந்தவன்போல் மடிந்த அவன்தன்னலமற்ற சேவையின் பெருமையைப் பற்றி யாரும் பேசவில்லை. அப்படிப் பேசுவதற்கு அவன் மட்டுமா இந்த உலகத்தில் அந்த நிலையில் வாழ்ந்து அபூர்வமாகச் செத்துப் போனான் அவனைப்போல் இன்னும் எத்தனை பேரோ?