பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சோறும் சுதந்திரமும்

னிதனின் ஆசைக் கனவில் உதித்த அதிசய உலகிலே பசி, பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவை யற்ற ஆனந்த மயமான வானுலகிலே - சுயசிரம ஜீவிகள் இருவர் ஒரு நாள் சந்தித்தனர். அவர்களில் ஒருவர் நீக்ரோ; இன்னொருவன் இந்தியன்.

நீக்ரோவின் தோற்றத்தைப் பார்த்ததும் ‘நீ எந்த தேசத்தைச் சேர்ந்தவன், ஐயா?’ என்று இந்தியனுக்குக் கேட்கத் தோன்றிற்று; கேட்டான்.

நீக்ரோ அதிசயத்துடன் அவனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ‘நல்லவேளை எடுத்ததும் "நீ கறுப்பனா? என்று கேட்கமாமல் எந்த தேசத்தை சேர்ந்தவன்?" என்று கேட்டாயே அந்த அளிவில் மகிழ்ச்சி என்றான்.

"ஏன், என்ன?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் இந்தியன்.

"அதை ஏன் கேட்கிறாய், அப்பனே அமெரிக்காவில் என்னைப் போன்றவர்களைக் கண்டதும் "நீ கறுப்பனா?" என்றுதான் முதலில் கேட்பார்கள் - ஏன் தெரியுமா? என் தோல் கறுப்பாம்; அவன் தோல் வெளுப்பாம்!" என்றான் நீக்ரோ.

"ஓகோ!" நீ அமெரிக்காவைச் சேர்ந்தவனா? - அப்படியானால் சரிதான். எங்கள் தேசத்தில் சனாதனிகள் ஜாதித் திமிர் பிடித்து அலைவது போல் உங்கள் தேசத்தில் வெள்ளையர்கள் நிறத் திமிர் பிடித்து அலைகிறார்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றான் இந்தியன்.

"எனக்குத் தேசம் என்று ஒன்று கேடா - என்னை ஆப்பிரிக்கா தேசத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வார்கள்; ஆனால் நான் இருந்ததெல்லாம் அமெரிக்காவில் தான்!" என்றான் நீக்ரோ.

"நீ இங்கே வந்து எத்தனை நாட்களாகி யிருக்கும்?”

"நாட்களா எத்தனையோ வருஷங்களாகிவிட்டன!”

"ஆமாம், பூலோகத்தில் நீ என்ன வேலை செய்து கொண்டிருந்தாய்?”

வேலையைப் பற்றிக் கேட்டதும் நீக்ரோ ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். பிறகு, "இன்ன வேலை என்று சொல்வதற்கில்லை அப்பனே எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தேன்!” என்றான் துக்கம் தோய்ந்த குரலில்.