பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278



விந்தன் கதைகள்


தேடிக் கொண்டு அவர்கள் வருவார்களா, அவர்களைத் தேடிக்கொண்டு நீங்கள் போவீர்களா?’ என்று அவன் கேட்டான்.

‘அழகுதான்! எங்களைத் தேடிக்கொண்டு அவர்கள் ஏன் வருகிறார்கள்? நாங்கள்தான் அவர்களைத் தேடிச் செல்வோம்’ என்றான் இந்தியன்.

‘நல்லவேளை நாங்கள் அவர்களைத் தேடிக் கொண்டு செல்வதில்லை; அவர்கள் தான் எங்களைத் தேடிக் கொண்டு வருவார்கள்’ என்றான் நீக்ரோ.

இந்தியன் "பரவாயில்லையே" என்று சொல்லி நீக்ரோவின் முதுகில் ஒரு 'ஷொட்டு'க் கொடுத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டான்.

"பரவாயில்லையாவது எங்களுக்குக் கிடைத்த அடியும் உதையும் உங்களுக்கெல்லாம் கிடைத்திருக்குமா? என்ன" என்று சொல்லிவிட்டு, நீக்ரோ தழும்புகள் நிறைந்த தன் முதுகை இந்தியனுக்குத் திருப்பிக் காட்டினான்.

"வெட்கக் கேடுதான்! அடியும் உதையும் எங்களுக்கு மட்டும் கிடைக்காமல் இருக்குமா? - ஏதாவது ஒரு சிறு தவறு செய்தால் போதும்; மரத்தோடு மரமாக எங்களைச் சேர்த்துக் கட்டி வெளு, வெளு என்று வெளுத்து விடுவார்கள். உனக்கு ஒரு கதை தெரியுமா? - எங்கள் வம்சத்தில் நந்தன் என்று ஒருவன் இருந்தானாம். அவன் ஒரு பைத்தியம் - அதாவது பகவான் மீது பைத்தியம். அந்தப் பைத்தியத்தின் காரணமாக அவன் பண்ணையார் இட்ட வேலையைச் சரியாகச் செய்ய மாட்டானாம். அதனால் அடிக்கடி அவன் அவரிடம் அடிபட நேர்ந்ததாம். அப்படி அடிபட நேரும்போதெல்லாம் அந்த அப்பாவி என்ன சொல்வானாம் தெரியுமா? - ஐயோ! என்னை அடிப்பதால் உங்கள் கை வலிக்குமே ஆண்டே என்று சொல்லிக் கதறுவானாம்! - அந்தக் காலத்து நந்தனார் அப்படியென்றால் இந்தக் காலத்து நந்தனார்கள் எப்படி என்கிறாய்? - சும்மா அடியுங்க, சாமி நல்லா அடியுங்க! உங்க உப்பைத்தின்றேன். உங்கதுணியைக் கட்றேன் - நீங்க அடிக்காம வேறே யாரு சாமி, அடிக்கிறது?’ என்று சொல்லித் தங்கள் முதுகை முதலாளிகளுக்குத் திருப்பித் திருப்பிச் காட்டுகிறார்கள்! - எப்படியிருக்கிறது, கதை?"

"கதை நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் இதுகூட எனக்கு தேவலை என்று படுகிறது; ஏனெனில், இதை விட மோசமாக சோதனைகளுக்கெல்லாம் ஒரு காலத்தில் நாங்கள் ஆளாகியிருகிறோம்..."