பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

விந்தன் கதைகள்


‘அட எழவே! அப்படின்னா நம்ம வீட்டுத் தரித்திரம் சுலபமாத் தொலையறதுக்கு ஒரு வழி இருக்காப்போல இருக்கே?’

‘அது என்ன வழி, மாமா?”

“யாராச்சும் ஒரு பணக்காரப் பய வீட்டுக்குப்போய் அவனுக்குத் தெரியாம ஒரு நாளைக்கு நம்ம வீட்டு விளக்கை ஏத்திக்கிட்டு வந்துட்டா, அவன் வீட்டு லச்சுமி நம்ம வீட்டுக்கு வந்துடுவா, இல்லையா?”

முனியம்மாள் சிரித்தாள்; கிழவனும் ஒருகணம் தன் கவலையை மறந்து அவளுடைய சிரிப்பில் கலந்து கொண்டான்.

***

சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தை அழும் சத்தமும், அந்தக் குழந்தையை முனியம்மாள் அதட்டி அடிக்கும் சத்தமும் கிழவன் காதில் விழுந்தது.

"என்னத்துக்குக் குழந்தை அழுவுது? ஏன் அதைப் போட்டு நீ அடிக்கிறே?"என்று கிழவன் கேட்டான்.

"அத்தனை சோள மா வீட்டிலே கிடந்திச்சு. அதையாச்சும் நாலு ரொட்டியாத் தட்டி உழைச்சிட்டு வர 'அந்த மனுச'னுக்கு வைக்கலாம்னு பார்த்தா, இந்தப் பேய்ப் பிள்ளை அது மாவாயிருக்கிறப்பவே தின்னுப் பிடணும்னு ஒரேயடியாய்ப் பிடிவாதம் பிடிச்சுத் தொலைக்குது’

"குழந்தைக்குப் பசிபோல இருக்குது. சுருக்க ஒரு ரொட்டிசுட்டு அதன் கையிலே கொடேன்!"

"எல்லாங் கொடுத்தேன் சுட்டரொட்டி வேணாமாம்; பச்சை மாவுதான் வேணுமாம்!"

"சரிதான் சோள ரொட்டியினுடைய லட்சணம் நம்ம குழந்தைக்கும் தெரிஞ்சு போச்சாக்கும்? அந்தப் பாழும் ரொட்டி தொண்டையை விட்டுக் கீழே இறங்கினாத்தானே? அதுக்குத்தான் பச்சை மாவாவே தின்னுப்பிடணும்னு குழந்தை நெனைக்குது"

"சோள ரொட்டி இறங்கலேன்னா, அப்பாவை பிஸ்கோத்து வாங்கி வந்து தரச் சொல்லிச் சாப்பிடறது தானே? நானா வேண்டாங்கிறேன்!" என்று முனியம்மாள் அந்தக் குழந்தையின் கன்னத்தில் ஓர் இடி இடித்தாள்.