பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

விந்தன் கதைகள்

அப்படிப் பின்பற்றியிருந்தால் ஒரு வேளை அவருக்கு அந்த ‘யுத்தகாலத் தொந்தி' விழாமலே இருந்திருந்தாலும் இருந்திருக்கலாமல்லவா?

இந்த 'ஏழை - பங்காளர்' ஏறி உட்கார்ந்ததும் ரயில் நகர்ந்தது. அந்தச் சமயத்தில் ‘கார்டு' அலறியதையும் பொருட்படுத்தாமல் ஒருவன் தலை தெறிக்க ஓடிவந்து முதலியார் ஏறியிருந்த பெட்டிக்குள் ஏறினான். அவன் பெயர் நாச்சியப்பன். யாரோ ஒரு ‘மவராசன்’ குப்பையில் எறிவதற்காக வைத்திருந்த பழைய கோட்டு ஒன்றை அவனிடம் கொடுத்து, அவனுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகப் புண்ணியத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தான். அந்தக் கோட்டைத்தான். அவன் அன்று அணிந்து கொண்டிருந்தான். அதற்குள் சட்டையோ, பனியனோ ஒன்றுமில்லை. அவனுடைய அரையை ஒர் அழுக்கடைந்த ‘கைலி' அலங்கரித்துக் கொண்டிருந்தது. முகத்தின் அழகைப்பற்றியோ சொல்லவே வேண்டாம். அந்த நீண்டு வளர்ந்திருந்த மீசைகள் மட்டும் அவனுடைய குழி விழுந்த கன்னங்களை மறைத்துக் கொண்டிராவிட்டால், அவனை ஒரு கணம்கூட யாராலும் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. தலையையாவது கொஞ்சம் எண்ணெய் தடவி வாரிக் கொண்டிருக்கலாம். அதற்கும் அவனுக்கு வசதியில்லையோ, அல்லது மனந்தான் இல்லையோ? - யார்கண்டார்கள்?

இந்த லட்சணத்தில் இருந்த அவனைத் தொடர்ந்து நல்ல வேளையாக மனைவி என்று சொல்லும் முறையில் யாரும் வரவில்லை. ஆனால் அவனுடைய இடுப்பில் மட்டும் ஒரு குழந்தை இருந்தது. தோற்றத்தில் அது அவனையே ஒத்திருந்தது. அந்தக் குழந்தைக்கு ஒரு வருஷம் பூர்த்தியாகியிருக்கலாம். ‘இன்று சாகுமோ, நாளை சாகுமோ!’ என்று இருந்த அதற்குக் குரல் மட்டும் எட்டரை கட்டைக்கு மேல் இருந்தது. ஜனக் கூட்டத்தில் இடிபட்டு அது 'வீல், வீல்' என்று கத்திய சத்தம், ரயிலின் ஊதல் சத்தத்தைக்கூடத் தோற்கடித்து விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

நாச்சியப்பனுடைய கையில் பெட்டியும் இல்லை. படுக்கையும் இல்லைதான். ஆனால் அவையிரண்டும் இருந்தால் அவனுக்கு எவ்வளவு தொந்தரவாயிருக்குமோ அதற்கு மேல் அந்தக் குழந்தை இருந்தது தொந்தரவாயிருந்தது! 'சிசுஹத்தி' செய்வது மகா பாவமென்றும், அதனால் ஏழு நரகங்களுக்கும் கீழான நரகத்துக்குச் செல்லவேண்டி நேரும் என்றும் சாஸ்திரம் பயமுறுத்துவதாக