பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மவராசர்கள்

302

நாச்சியப்பன் மட்டும் கேள்விப்பட்டிராவிட்டால், நிச்சயம் அந்தக் குழந்தையை அவன் உடைப்பில் தூக்கிப் போட்டுக் கொன்றே விட்டிருப்பான்!

பீதாம்பர முதலியாரும் நாச்சியப்பனும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் தான் அந்தப் பெட்டிக்குள் ஏறினர். ஆனால் எதற்கும் ஒழுக்கத்தைக்கூட மீறி நிற்கும் அந்தப் பாழாய்ப்போன அந்தஸ்து என்று ஒன்று வந்து குறுக்கே நிற்கிறதல்லவா? அதன் காரணமாக, முதலியாருக்கும் அவருடைய மனைவிக்கும் மட்டும் தான் உள்ளே இருந்தவர்கள் நெருக்கியடித்து உட்கார்ந்து கொஞ்சம் இடம் விட்டனர். நாச்சியப்பனையோ யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அவனை ஏதோ ஒரு விநோத ஐந்துவைப் பார்ப்பதுபோல் பார்த்தனர். அப்படிப் பார்த்தவர்கள் சும்மா இருக்கவும் இல்லை; தங்களுக்குள் அடிக்கடி ஏதோ பேசிக் கொள்வதும் ‘களுக்'கென்று சிரிப்பதுமாக இருந்தனர்.

உலகத்தில் ஏழை எளியவனைக் கண்டால் எள்ளி நகையாடுபவர்கள்தான் அதிகம் என்ற உண்மையை நாச்சியப்பன் உணர்ந்திருந்தானோ என்னமோ, மேற்கூறிய காட்சிகளை யெல்லாம் கண்டும் காணாதவன் போல் இருந்தான். அந்தச் சமயத்தில் தான் உட்காருவதற்கு எப்படியாவது கொஞ்சம் இடம் கிடைத்தால் போதும் என்பது அவனுடைய ஒரே நோக்கமாயிருந்தது. அதற்காக, அந்தப் பெட்டிக்குள் உட்கார்ந்திருந்த ஒவ்வொருவரையும் அவன் பரிதாபத்துடன் பார்த்தான். "கொஞ்சம் இடம் விடுங்கள் ஐயா!" என்று கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டான். ஊஹூம் யாரும் அசைந்து கொடுக்கவில்லை.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் வண்டி நிற்பதும் கிளம்புவதுமாக ஓடிக் கொண்டே இருந்தது. ரயிலின் ஆட்டத்திற்கேற்ப நாச்சியப்பன் ஆடிக் கொண்டே சென்றான். அந்த ஆட்டத்தில் குழந்தையின் தூக்கம் எங்கே கலைந்து விடுமோ என்று அவனுக்குப் பயமாயிருந்தது. அப்படி எழுந்துவிட்டால் அதனுடன் மாரடிப்பதற்கு வேண்டிய தெம்பும் அவனுக்கு அந்தச் சமயத்தில் இல்லை. கீழே உட்கார்ந்து விடலாம் என்று பார்த்தாலோஎங்கும் ஒரே பெட்டியும் படுக்கையுமாக இருந்தன. அவற்றின் மேலே உட்காருவதற்கும் அவனுக்கு, ‘என்ன சொல்வார்களோ என்னமோ' என்று அச்சமாயிருந்தது. ஆனாலும் அவன் குழந்தையை வைத்துக்