பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மவராசர்கள்

303

"ஏன், வெளியே வீசி எறியப்படாதோ? கையில் தான் கொடுக்க வேண்டுமோ?" என்றார் அவருக்கு எதிர்த்தாற்போலிருந்த ஒரு அமுத்தல் பேர்வழி.

அவருக்கு அருகிலிருந்த ஒரு புரொபஸர் "தப்பு, தப்பு!மொத்தம் முப்பத்திரண்டு பற்கள், ஸார்!" என்று கூறி ஹோவென்று சிரித்தார்.

"எல்லாம் பார்த்துத்தான் சொன்னேங்காணும் அவனுக்கு முன் வரிசையில் இரண்டு பற்களைக் காணோம்" என்றார் பெட்டிக்காரரும் சிரித்துக் கொண்டே.

இந்தச் சமயத்தில் இன்னொரு பெரிய மனிதர் ஒரு சின்னச் சந்தேகத்தை கிளப்பிவிட்டார். "ஏன், ஸார் இவன் டிக்கெட் வாங்கியிருப்பானா?” என்னும் சந்தேகம் தான் அது!

அவன் டிக்கெட் வாங்கியிருக்காவிட்டால் தாம் வாங்கிக் கொடுக்கலாம் என்ற நோக்கத்துடன் அவர் அந்தச் சந்தேகத்தைக் கிளப்பிடவில்லை. "டிக்கெட் செக்கர் வந்து அவனை இறக்கிவிடுவதற்கு முன்னால் தாமே இறக்கி விட்டுவிடலாமே" என்ற பரந்த நோக்கத்துடன்தான் அந்தச் சந்தேகத்தை கிளப்பிவிட்டார்!

இதைக் கேட்டதும் நாச்சியப்பனுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. இருந்தாலும் அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு "நான் சின்ன மனுஷனுங்க; எனக்கு அந்தப் பெரிய மனுஷன் தில்லு முல்லெல்லாம் செய்யத் தெரியாதுங்க!" என்று சொல்லிக்கொண்டே, தன் மடியில் பத்திரமாக வைத்திருந்த டிக்கெட்டை அவன் எடுத்துக் காட்டினான்.

அதே சமயத்தில அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றது. எதிர்பாராதவிதமாக நாச்சியப்பன் ஏறியிருந்த பெட்டிக்குள் டிக்கெட் பரிசோதகர் ஏறினார். அவன் சொன்னதற்கு ஏற்றார் போல் அவரைக் கண்டதும் பெரிய மனிதர் ஒருவர் ஓடி ஒளியப் பார்த்தார். டிக்கெட் பரிசோதகர் அவரை விடவில்லை. விரைந்து சென்று "எங்கே டிக்கெட்?” என்று கேட்டார்; அவர்விழித்தார். உடனே அவரைக் கீழே இறக்கி விட்டுவிட்டு டிச்கெட் செக்கர் மேலே போனார்.

இந்தக் காட்சியைக் கண்டதும் எல்லோருடைய வாய்களும் அடைத்து விட்டன. நாச்சியப்பன் காலியான இடத்தில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தான். தங்கள் சகாவிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்ட டிக்கெட் செக்கர்ரைப் பற்றி பெரிய மனிதர்கள் முணுமுணுத்தனர்.