பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

விந்தன் கதைகள்


இத்தனை ரகளைகளையும் அதுவரைகவனித்தும் கவனியாதவர் போலிருந்த பீதாம்பர முதலியார் "ஏன், அப்பா உனக்கு எந்த ஊர்?” என்று நாச்சியப்பனைப் பொழுதுபோக்குக்காகக் கேட்டு வைத்தார்.

“மாயவரம்தானுங்க!" என்றான் நாச்சியப்பன்.

"இப்பொழுது எங்கே பயணம்?”

"பட்டணத்துக்குத்தான்!"

"அங்கே என்ன வேலை?"

"வேலை என்ன வேலை! வயித்துப் பிழைப்புக்கு அங்கே ஏதாச்சும் வழி பிறக்கும்னுதான் போறேன்”

"இதற்குமுன்னால் நீ என்ன வேலை செய்து கொண்டிருந்தாய்?”

"மரம் ஏறிக்கிட்டு இருந்தேனுங்க"

அப்படின்னா நீ "மாஜி-கள் இறக்கும் தொழிலாளி போல இருக்கு!"

“ஆமாங்க”

"அதுதானே பார்த்தேன் - குடிக்கக் கள் இறக்கிக் கொடுத்து நீ எத்தனையோ குடிகளைக் கெடுத்தாயல்லவா? அந்தப் பாவமெல்லாம் சேர்த்து உன்னை இந்தக்கதிக்கு இப்போது கொண்டு வந்து விட்டிருக்கிறது" என்றார் புண்ணியம் செய்து வந்த முதலியார்.

நாச்சியப்பன், "இந்த இடத்திலேதானுங்க உங்களுக்கும் எனக்கும் வித்தியாசப்படுது. நீங்க சொல்றாப் போல நான் செய்தது பாவமா இருந்திருந்தா, நானும் உங்களைப் போலவே இருந்திருப்பேனுங்களே!" என்றான்.

முதலியாரை இது தூக்கிவாரிப் போட்டது. ஒரு கணம் அவர் அயர்ந்து போனார். மறுகணம் தம்முடைய இயற்கையான சுபாவத்தால் அதைச் சமாளித்துக் கொண்டு, "பேஷ், பேஷ்! உலகத்தில் பாவம் செய்கிறவர்கள் தான் நன்றாயிருக்கிறார்கள் என்று நீ சொல்கிறாய் போலிருக்கிறது! நல்ல ஆளப்பா நீ" என்று கூறிச்சிரித்தார். ஆனால் அந்தச் சிரிப்பு உள்ளத்தோடு ஒன்றவில்லை என்பதை அவருடைய பரந்த முகம் பளிச்சென்று எடுத்துக்காட்டியது.