பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மவராசர்கள்

305


இந்தச்சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்த முதலியாரின் குழந்தை விழித்துக் கொண்டு அழுதது. அதற்குள் பணக்காரத் தூக்கத்தில் சற்றே லயித்துவிட்டிருந்த அதன் தாயார், குழந்தை அழுததைக் கவனிக்கவில்லை. முதலியார் இதைக் கவனித்ததும் தம்முடைய மனைவியை மெல்லத் தொட்டு "தங்கம், தங்கம்" என்றார்.

தங்கம் திடுக்கிட்டு எழுந்து, "எந்தப் பட்டணம் பாழாய்ப் போச்சு?" என்று எரிந்து விழுந்தாள்.

முதலியார் நெருப்பை மிதித்துவிட்டவர்போல் குதித்து அவள் பக்கம் திரும்பி "இது கூட வீடா, என்ன? குழந்தை அழுகிறது என்று சொல்ல வந்தால் இப்படி எரிந்து விழுகிறாயே!" என்றார் பரிதாபத்துடன்.

தங்கம் போனாற் போகிறதென்று பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

ஆனால் அந்தக் குழந்தையோ பொல்லாத குழந்தையாக இருந்தது. அது "கண்ணே என்றாலும் கேட்கவில்லை; கற்கண்டே" என்றாலும் கேட்கவில்லை; திறந்த வாயை மூடாமல் அழுத அந்தக் குழந்தையை எப்படி எப்படியெல்லாமோதேற்றிப்பார்த்தாள்தங்கம். அது எதையும் லட்சியம் செய்யவில்லை; பால் கொடுத்தாலும் குடிக்க மறந்து வீரிட்டு அழுதது.

முதலியார் பெட்டியைத் திறந்து ஒரு ‘கிளாக்ஸோ' பிஸ்கட்டை எடுத்துக் குழந்தையிடம் கொடுத்தார். அந்தப் பிஸ்கட்டை வாங்கி அது ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தது. பிறகு, கீழே விட்டெறிந்துவிட்டு ‘ஓ'வென்று அலறியது.

அடுத்தாற்போல் ஓர் ஆரஞ்சுப் பழத்தை எடுத்துக் கொடுத்தார்; அதையும் கீழே உருட்டி விட்டது.

முதலியார் சளைக்கவில்லை. "இது வேணுமாடா, ராஜா" என்று சொல்லிக் கொண்டே மூன்றாவதாக ஒரு ‘ஸெலுலாய்ட்' பொம்மையை எடுத்துக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டதும் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது. அதன் தாயார் மீண்டும் பணக்காரத் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்!

வி.க. -20