பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

விந்தன் கதைகள்


"ப்பாடி மழை ஓய்ந்தது!" என்று சொல்லிக் கொண்டே முதலியார் நாச்சியப்பன் பக்கம் திரும்பினார்.

"இது என்ன மழை நம்ம குழந்தை அழறப்போ நீங்க பார்க்கணும்" என்றான் நாச்சியப்பன்.

"அவ்வளவுதான்; அதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம்!” என்று சொல்வது போல், அவனுடைய குழந்தை திடீரென்று விழித்துக் கொண்டு கத்த ஆரம்பித்து விட்டது.

'கண்ணே, கற்கண்டே!' என்று கொஞ்சுவதற்குப் பதிலாக, 'சனியனே, பீடையே!' என்று திட்டிக் கொண்டே நாச்சியப்பன் குழந்தையை தூக்கினான். அது தன் அழுகையை நிறுத்தவில்லை. அதற்காக நாச்சியப்பன் பெட்டியைத் திறந்து, ‘கிளாக்ஸோ’ பிஸ்கட்டையோ, ஆரஞ்சுப் பழத்தையோ, ‘ஸெலுலாய்ட்' பொம்மையையோ எடுத்து அதன் கையில் கொடுக்கவில்லை; அவற்றுக்குப் பதிலாக அந்தக் குழந்தையின் கன்னத்தில் அவன் 'பட்’ என்று ஓர் அறை கொடுத்துவிட்டுத் தன்னுடைய கோட்டுப் பையில் கையை விட்டான். அவன் எடுக்கப் போகும் வஸ்துவைப் பார்ப்பதற்காக முதலியார் தம் கண்களை ஆவல் மிகுதியால் அகல விரித்துக் கொண்டார். நாச்சியப்பன் ஒரு சின்னஞ்சிறு தகரடப்பியைக் கையில் எடுத்தான். அதற்குள் பாலா இருந்தது என்கிறீர்கள்? - இல்லை, அபின்!

"இதென்ன, அபின்போலிருக்கிறதே!" என்றார் முதலியார்.

“என்ன, அப்படிச் சொல்றீங்க? - இது அபினே தான்!” என்று சொல்லி, நாச்சியப்பன் அவருடைய சந்தேகத்தைத் தீர்த்து வைத்தான்.

"இது என்னத்துக்கு?" என்று முதலியார் ஒன்றும் தெரியாமல் கேட்டார்.

"நம்ம குழந்தைக்குத் தானுங்க!" என்று நாச்சியப்பன் சாவதானமாகச் சொன்னான்.

"அட, பாவி குழந்தைக்கு யாராவது அபினைக் கொடுப்பார்களா?" என்று அலறினார் முதலியார்.

நாச்சியப்பன் சிரித்துக் கொண்டே அழுத குழந்தையின் வாயில் கொஞ்சம் அதிகமாகவே அபினைத் திணித்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் அது அபின் தின்ன மயக்கத்தில் அயர்ந்து தூங்க ஆரம்பித்துவிட்டது. இனிமே பொழுது விடியும்வரை