பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

விந்தன் கதைகள்

பண்ணிக்கோ அது வரைக்கும் இந்த மாதிரிப் பேச்செல்லாம் என் காதிலே விழாம நீ பார்த்துக் கிட்டா நல்லது. உனக்கு இந்தக் கிழவன் வேணும்னா அப்படிச் செய், இல்லேன்னா உன் இஷ்டம்"

"இன்னொரு தடவை அப்படிச் சொல்லாதே அப்பா என்மனசு மட்டும் சரியாயிருந்தா, யாரு என்னா சொன்னா என்னாப்பா ஆடு மாடு மாதிரி அல்ப ஆசைக்காக நான் உன்னை விட்டுவிடுவேனா, அப்பா?" என்று சொல்லிக் கொண்டு கிழவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள் கேதாரி.

* * *

இருளப்பனின் ஏக புத்திரி கேதாரி. இருந்தாலும் அவள் செல்லப் பெண்ணாய் வளர முடியவில்லை. அது மட்டுமா? தாயற்ற அவளால் வயதுவந்த பிறகும்கூடப் படுதாமுறையைக் கைக்கொள்ள முடியவில்லை. எப்படி முடியும் இருளப்பனுடைய உழைப்பின் மதிப்பு மாதம் பதினைந்து ரூபாய்க்கு மேல் ஏறவேயில்லை. என்னதான் சிக்கனத்தைக் கடைப்பிடித்தாலும் இரண்டு ஜீவன்களுக்கு அந்த வருமானம் போதுமா? எனவே, கேதாரியும் அறுவடை காலத்தின்போது வயல் வேலைகளில் கலந்து கொள்வாள். அப்படி வயிற்றுப் பிழைப்புக்குப் போகும்போது வரும் வம்புதான் மேற்சொன்ன ஊராரின் பேச்சு!

அந்த ஊரில் தோட்ட வேலை செய்வதில் இருளப்பன் பேர் போனவன். அவனுடைய வேலைத் திறமையைப் பற்றி மெச்சிப் பேசாதவர்களே அங்கு கிடையாது. ஆனாலும் அந்தத் திறமை அவனை வாழவைக்கவில்லை; வேறொருவனைத் தான் வாழ வைத்தது. காரணம், வறுமைதான். இல்லை யென்றால் அவன் ஏன் தன்னுடைய வேலைத் திறமையை இன்னொருவனிடம் மாதம் பதினைந்து ரூபாய் வாடகைக்கு விட்டிருக்கப் போகிறான்?

அப்படித்தான் வாடகைக்கு விட்டிருந்தானே, அதற்குரிய அந்தஸ்தாவது அவனுக்குக் கிடைத்தா? அதுவும் இல்லை, வெறும் வேலைக்காரனாகவும் கூலிக்காரனாகவும் இருந்ததைவிட அவனுக்கு வேறொரு அந்தஸ்தும் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனாலும் அதை இங்கே சொல்லிவிடத்தான் வேண்டும். அதாவது இருளப்பனிடம் பணம் இல்லை. இருந்திருந்தால் அவனிடம் வேலைத் திறமைகூட இருந்திருக்க வேண்டாம். அது இல்லாமலே அவன் எஜமானாக