பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

விந்தன் கதைகள்

சேர்த்து நான் கேட்கிறப்போ மொத்தமாகக் கொடுங்க! எங்க குடிசை ரொம்ப நாளா வானத்தைப் பார்த்துக்கிட்டு நிற்குது; மழை பேஞ்சா உங்க வாசக சாலையைத் தேடி ஓடிவரவேண்டி யிருக்குது. அதைப் பிரிச்சுக் கட்டணுமில்லே; அதுக்குத்தான் இந்த நாலணாக்காசு! அதில்லாம எனக்கு ஒரு வேஷ்டி, என் பெண்டாட்டிக்கு ஒரு புடவை, குழந்தைக்கு ஒரு சட்டை எல்லாம் வாங்கணும். எத்தனையோ நாளுக்குப் பிறகு இன்னிக்குத்தான் எங்க ரெண்டுபேருக்கும் நல்ல வேலையா ஒரு ஆறு மாசத்துக்கு கிடைச்சிருக்குதுங்க! எனக்கு ஒரு ரூபா கூலி, கண்ணாத்தாவுக்கு முக்கா ரூவா கூலி. ஒண்ணரை ரூவாயிலே சாப்பிட்டுக்கிட்டு மிச்சம் நாலணாவை உங்ககிட்ட சேர்த்து வைக்கலாம்னு பார்க்கிறோம்!’ என்றான் அவன்.

"சரி!" என்றேன் நான்.

ஆனால் அவனுடைய உறுதி ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. ஐந்தாவது நாளே அவன் என் வீட்டைத் தேடி ஓடோடியும் வந்து, ‘என் எண்ணத்திலே மண் விழுந்து போச்சுங்க! கல்லு வரலேன்னு எங்களுக்கு இன்னிக்கு வேலையில்லை; அந்த ஒரு ரூ வாயைக் கொடுங்க, சாப்பாட்டுக்கு’ என்றான். நானும் கொடுத்துவிட்டேன்.

இப்படியே அவன் நாலைந்து நாட்கள் என்னிடம் நாலணா கொடுப்பதும், ஐந்தாவது ஆறாவது நாள் வந்து சேர்த்ததை வாங்கிக்கொண்டு செல்வதுமாக இருந்தான். விதியை வெல்லப் பார்க்கும் அவனுடைய முயற்சிக்கு இவ்வளவு சோதனையா!’ என்று எண்ணி என் மனம் வருந்தும். ஆனால் அவனுக்கு ஏதாவது உதவி செய்வதன் மூலம் அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்ளும் சக்தியை நான் பெற்றிருக்கவில்லை; ஆண்டவனும் எனக்குக் கொடுத்திருக்கவில்லை.

* * *

இந்த நிலையில் ஒரு மாசத்துக்குப் பிறகு ஒரு நாள் அவன் என்னிடம் வந்து, “என்னங்க, உங்களாலே எனக்கு ஒரு உதவி செய்ய முடியுங்களா?" என்றான்.

"என்ன உதவி....?: என்றேன்.

"எனக்கு ஒரு குழந்தை இருக்குது பாருங்க. அதாலே ரொம்பத் தொந்தரவா யிருக்குதுங்க! நேத்து வேலை சமயத்திலே அது 'வாள், வாள்’னு கத்தித் தொலைச்சுது. பெத்தவளுக்கு மனசு கேட்குமா?