பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாறுதல் இல்லை

315

சித்த எடுத்துக் கொஞ்சம் பால் கொடுத்தா. அந்தச் சமயம் பார்த்து எசமான் வந்துட்டாரு. அப்புறம் என்ன? ‘குழந்தைக்குப் பால் கொடுக்கிறதுன்னா நீ வீட்டிலேயே இருந்துக்க, இங்கே வரவேணாம்’னு சொல்லிப்பிட்டாரு!”

"அப்படியானால் அந்தச் சின்னஞ் சிறு சிசுவோடு வேலைக்கு வந்து வயிறு வளர்க்க வேண்டியிருக்கும் உங்களுடைய கதியைப் பற்றி அவர் கவலைப்படவில்லை; குழந்தைக்குப் பால் கொடுப்பதால் தன் வேலைக்குக் குந்தகமாய்ப் போய்விடுகிறதே என்றுதான் கவலைப்பட்டாரா!"

“ஆமாங்க!”

"அதற்கு நீ என்ன சொன்னாய்?”

"கோவிச்சுக்காதிங்க, எசமான் நாளையிலேருந்து குழந்தையை வீட்டிலே விட்டுட்டு வந்துட்றோம் னு சொன்னேன். எங்க வயிற்றிலே பாலை வார்த்தாற் போல 'சரி'ன்னாரு. ஆனா இப்படிச் சொல்லி அந்தச் சமயம் தப்பிச்சுட்டோமே ஒழிய, நாளைக்குக் குழந்தையை எங்கே விட்டுட்டுப் போறதுன்னு தெரியலே - குழந்தையும் அப்படி ஒண்ணும் சின்னக் குழந்தையில்லே; பெரிய குழந்தைதான். யாராச்சும் வேளா வேளைக்குப் பால் வார்த்து வச்சிருந்தா பேசாம இருக்கும்...."

“அப்படியென்றால் உன்னுடைய குழந்தையை என் வீட்டிலே விட்டுவிட்டுப் போகிறேன் என்கிறாயா?”

“ஆமாங்க....!"

"அதற்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்...?”

"அப்படி ஏதாச்சும் நேர்ந்தாத்தான் ரொம்ப நல்லாதாப் போச்சுங்களே!"

இதைச் சொல்லும்போது அவன் குரல் கம்மியது; என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்தது.

இருந்தாலும் "எனக்கென்னமோ சம்மதந்தான்! ஆனால் என் வீட்டுக்காரி ஒப்புக் கொள்ள வேண்டுமே; கணவன் - மனைவியாயிருந்தாலும் நான் வேறு, அவள் வேறாகவல்லவா இருக்கிறோம். எதற்கும் நீ கொஞ்ச நேரம் இங்கேயே இரு; நான் அவளைக் கேட்டுக் கொண்டு வந்து சொல்கிறேன்!” என்றேன் நான்.