பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
"அவன் யாரோ!

"இந்தச் சின்னஞ் சிறு வார்த்தையை அந்தச் சின்னஞ் சிறு பாலகன் ஏன் அப்படி முணு முணுக்கிறான்? அதை முணு முணுக்கும் போதெல்லாம் அவன் என் கண்ணீர் விடுகிறான்?

இந்த வார்த்தையை ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் அவன் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறான். அப்போது அந்த வார்த்தை அவன் உள்ளத்தைச் சுடவில்லை; நெஞ்சை உருக்கி நிலைகுலையச் செய்யவில்லை இப்போது மட்டும் ஏன் அப்படி?

ஆச்சரியந்தான்............

ஐப்பசி மாதம்; சதாதூறிக் கொண்டே இருந்தது. "'பள்ளிக் கூடம் விட்டதும் பையன் எப்படி வருவான், இந்த மழையில்? என்ற கவலை அப்பாவைப் பீடித்தது.

குடையை எடுத்துக் கொண்டு கிளம்பினார்; தன் பையனை அழைத்துக் கொண்டுவர.

வழியில் ஒரு மூங்கில் பாலம், அதைக்கடந்தால் அவர்கள் வீடு.

எத்தனையோ முறை எந்த விதமான விக்கினமும் இன்றி அதைக் கடந்து அவர்கள் வந்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று ...........

அவர்களுக்கு ஒன்றும் நேரவில்லைதான்; ஆனால் யாரோ ஒரு வழிப்போக்கன்-அவன் கால் வைத்ததும் அந்த மூங்கில் பாலம் முறிந்து விழுந்தது; அவனும் தொபுகடீரென்று கீழே விழுந்தான்.

"ஐயையோ!"

இப்படி ஓர் அலறல் !- அடுத்தாற் போல், என்னைக் காப்பாற்றுங்கள்; என்னைக் காப்பாற்றுங்கள்! என்ற கதறல்

பையனுக்குத் தாங்கவில்லை. பாலத்தை நோக்கி ஓடினான்- அருமை அப்பா விடுவாராரா?. அவன் யாரோ, நீ வாடா! என்று கையைப் பிடித்து கரகரவென்று இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார். அதற்குப் பின் அந்த வழிப்போக்கனைப் பற்றி அவர்கள் கவலைப்படவேயில்லை!