பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"அவன் யாரோ”

319

ஆனால் இன்று ...........

பொங்கற் புது நாள். கிராமத்தில் கரும்பு வெட்டும் போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்பாவுக்குத் தெரியாமல் பையனும் அதில் கலந்து கொண்டான்.

"ஐயையோ !

அதே அலறல் - அலறியவன் பையன்தான்! அவன் கையில் சரியான கொடுவாள் வெட்டு; 'குபுகுபு' வென்று பாய்ந்தது ரத்தம்!

யார் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்? அவனுடன் போட்டியிட்ட சிறுவர்கள் கூடப் பயந்து ஓடி விட்டார்கள். எல்லாம் தங்கள் அப்பாக்களிடம் அவர்கள் கற்றுக் கொண்ட அவன் யாரோ, அவன் யாரோ!” என்ற பாடந்தான்!

கடைசியாக ஒரு சிறுவன் வந்தான்; வெட்டுப் பட்டவனை நோக்கி விரைந்தான்.

ஆனால்..........

அதற்குள் அவன் அப்பா வந்து விட்டார்; வழக்கம் போல அவன் யாரோ, நீ வாடா என்று அவனை அழைத்துக் கொண்டுபோய் விட்டார்!

இப்போதுதான் அந்த மூங்கில் பாலத்து சம்பவம் நினைவுக்கு வந்தது வெட்டுப்பட்ட சிறுவனுக்கு; தன் அப்பாவும் அவன் அப்பாவும் ஒரே மனோபாவத்தில் இருப்பது குறித்து அந்தச் சிறுவன் மனம் பொருமினான்.

“அவன் யாரோ!" அவன் யாரோ!"

இவ்வாறு முணுமுணுத்துக் கொண்டே, உதவி செய்வார் யாருமின்றி அழுத கண்ணீர் ஆறாய்ப் பெருக அவன் அப்படியே சாய்ந்தான்.

பையனைக் காணாமல் அப்பா தேடிக் கொண்டு வந்தார் தெருவோரத்தில் மூர்ச்சையாகிக் கிடக்கும் அவனைக் கண்டதும் "ஆ! என்று அலறினார்.

"அவன் யாரோ?

"அவன் யாரோ!