பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாழப் பிறந்தவன்

31

"கேதாரிக்குக் கல்யாணம் செய்யப் பணம் எதற்குடா?" என்று கேட்டார்.

"என்ன சாமி அப்படிச் சொல்.நீங்க? கண்ணாலம்னா பணம் இல்லாம ஆயிடுங்களா? பாக்கு வெற்றிலை வழங்க வேண்டாமா? பழம் பலகாரம் வாங்க வேண்டாமா? பந்தி போஜனம் போட வேண்டாமா....?"

"நிறுத்துடா, போதும்! இதெல்லாம் ஒன்றும் உனக்கு வேண்டாம். பேசாமல் நான் சொல்வதைக் கேள். கேதாரியின் கல்யாண விஷயத்தைப் பற்றி உனக்குக் கவலையே வேண்டாம்..."

இப்படிச் சொன்னதும் இருளப்பனுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. "அப்படிச் சொல்லுங்கோ, எசமான் அந்தக் கவலையை நீங்களே ஏத்துக்கிறதுன்னா இந்த ஏழைக்கு என்ன குறையுங்க?" என்று சொல்லிவிட்டு அவன் பல்லை இளித்தான். முதலியார் மேலும் சொன்னார்:"அந்தக் கவலை உனக்கு வேண்டாம்; எனக்கும் வேண்டாம். கேதாரிக்கே இருந்துவிட்டுப் போகட்டும். ஊரிலே இருக்கிற பயல்களை யெல்லாம் காக்காயா வந்து தூக்கிக் கொண்டு போய்விட்டது? அவள் இஷ்டப்பட்ட எவனையாவது ஒருத்தனைத் தேடிப் பிடித்துக் கொள்கிறாள்"

ஏமாற்றமடைந்த இருளப்பனுக்குக் கோபம் கோபமாக வந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஏழையின் கோபம் அவனுடைய வாழ்வைத்தானே கெடுக்கும்? ஆகவே, 'தம் மகளாயிருந்தா எசமான் அப்படிச் சொல்லுவாரா?' என்று தனக்குள் எண்ணிக் கொண்டு, பேசாமலிருந்து விட்டான்.

இனி என்ன? இதுவே அவனுடைய இடைவிடாத வேதனையாகிவிட்டது.

* * *

இந்த வேலையின் காரணமாக, நாளடைவில் இருளப்பனின் மனம் அடியோடு மாறிவிட்டது. எஜமான் மீது அவன் வைத்திருந்த விசுவாசம் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிட்டது. அதுவரை இருளப்பனுக்குத் தன்னுடைய சொந்த தோப்பாகவே தோன்றி வந்த அந்தத் தென்னந் தோப்பு, இப்போது யாரோ ஒருவருடையதாகத் தோன்றிற்று. இத்தனை நாளும் தோப்பின் முழுப் பலனையும் எஜமானே அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையுடன் உழைத்து வந்த