பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

விந்தன் கதைகள்

அவன், இப்போது நாம் ஏன் அப்படி உழைக்க வேண்டும்? என்று எண்ணத் தலைப்பட்டு விட்டான் - எப்படியோ நாளைக் கடத்த வேண்டியது; மாதம் பிறந்தால் சம்பளத்தை வாங்கிக் கொள்ள வேண்டியது...அவ்வளவுதானே?

இந்தத் தீர்மானத்துக்கு வந்த அவன், இன்னொரு தீர்மானத்துக்கும் வந்து விட்டான். அதாவது எந்த விஷயத்துக்கும் பிறரை நம்பக்கூடாது; தன்னைத் தானே நம்ப வேண்டும் என்பதாக!

அவ்வளவுதான், நாளடைவில் அவனுடைய தீர்மானங்கள் நடைமுறைக்கு வர ஆரம்பித்துவிட்டன.

இடைவேளையில் இருளப்பன் தென்னங்கீற்றில் படுத்துச்சற்று இளைப்பாறுவது வழக்கம். அப்பொழுது யாராவது வழிப்போக்கர்கள் வேலியை ஆடோ, மாடோ மேய்வதாக எச்சரித்து விட்டால் உடனே எழுந்து அவற்றை விரட்ட விழுந்தடித்துக் கொண்டு ஒடுவான். அப்பொழுதெல்லாம் தூக்கத்தைவிடக் கடமைதான் அவனுக்குப் பெரிதாய்த் தோன்றும். இப்பொழுது அப்படியில்லை கடமையைவிடத்துக்கம்தான் பெரிதாய்த் தோன்றிற்று.

‘தென்னை மரத்தில் எவனோஏறித் தேங்காயைத் திருடுகிறான்’ என்று யார்தான் எவ்வளவு உச்சஸ்தாயியில் இப்பொழுது கூச்சல் போடட்டுமே! ஊஹூம், இருளப்பன் அதை காதில் போட்டுக் கொள்வதே கிடையாது. என்ன முழுகிப் போச்சு? எவனோ இரண்டு தேங்காயைத் திருடிக்கொண்டு போனால் தான் என்ன? என்று பெருந்தன்மையோடு பேசாமல் இருந்து விடுவான்.

* * *

ஒரு நாள் வழக்கம் போல் உதிர்ந்த ஒலைகளை முடைந்து கொண்டிருந்த போது இருளப்பனுக்கு ஒரு விசித்திரமான ஞானோதயம் உண்டாயிற்று - அடடா இந்த ஒலைகளை யெல்லாம் முடைந்து நம்முடைய வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும்படி எஜமான் முதலில் நமக்குக் கட்டளை யிட்டாரா? இல்லையே! நாமேதானே இந்த வேலையைத் தலைமேல் போட்டுக் கொண்டு ஒலை நூற்றுக்கு நாலைந்து ரூபாய் என்று விற்றுக் கொடுத்தோம்? உலர்ந்த மட்டை, பாளை, பன்னாடை இவற்றையெல்லாம் கூடச் சேகரித்து எடுத்துக் கொண்டு போய் அவர் வீட்டு அடுப்பை எரிக்க உதவினோம். அவற்றைக் கொண்டு நம் வீட்டு அடுப்பையாவது எரித்தோமா? அப்படி எரிப்பது துரோகம் என்று கருதினோமே.