பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாழப் பிறந்தவன்

33

அதற்கெல்லாம் பலன் இதுதானா? என்னுடைய ஒரே ஒரு பெண்ணை எவனோடாவது ஒடிப்போகச் சொல்வதுதானா? அட கடவுளே!

போனதெல்லாம் போகட்டும். இனிமேல் அப்படியெல்லாம் செய்யக் கூடாது. உலர்ந்த மட்டை மண்ணாங்கட்டியை எல்லாம் எஜமானுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் நம் வீட்டு அடுப்பை எரிக்க உபயோகித்துக் கொள்ள வேண்டும் - கட்டை வாங்கும் காசாவது மிச்சமாகாதா? அப்புறம் இந்த உதிர்ந்த ஒலைகளை யெல்லாம் சேர்த்துக் கட்டி சுருட்டி வைத்திருந்து வேலியின் எந்த மூலையிலாவது ஓர் இரகசிய வழியைச் செய்து அந்த வழியண்டை தினசரி பொழுது சாய்ந்ததும் கேதாரியை வந்து ஒலைக் கட்டைத் தூக்கி வைத்து நம் வீட்டுக்குக் கொண்டு போகச் சொல்ல வேண்டும்.

இப்படியாகக் கொஞ்சங் கொஞ்சமாய்க் கொண்டு போய்ச் சேர்த்தால்தான்மாதத்தில் நூறு ஒலையாவது சேர்ந்து விடாதா? சமயம் நேரும்போதெல்லாம் அவற்றை முடைந்து போட்டு வைத்தால் யாராவது வந்து வாங்கிக் கொண்டு போகிறார்கள்

அந்தப் பணத்தைக் கொண்டே அடுத்த தை மாதத்துக்குள் கேதாரிக்குக் கல்யாணம் செய்து வைத்து விடலாம் போலிருக்கிறதே! நல்ல யோசனைதான்; ஆனால் எஜமானுக்குத் தெரிந்தால்?

எப்படித் தெரிந்து விடும் நான்தானே காவற்காரன்? வேலைக்காரன் நினைத்தால் எஜமானை ஏமாற்ற முடியாதா என்ன? பேருக்கு ஒன்றிரண்டு ஒலைகளைக் கொண்டு போய் அவருடைய வீட்டில் சேர்ப்பது "இவ்வளவுதானா?” என்று கேட்டால், “ஆமாம் சாமி!" என்கிறது. அதற்கு மேலும் கேட்டால் சாக்குத்தானா சொல்ல முடியாது? "காற்றடிச்சாத்தானே?" என்கிறது ஒருநாள்; “சாப்பிடப் போயிருந்தேன்; யாரோ எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க!" என்கிறது இன்னொரு நாள். இப்படியே எஜமானை ஏமாற்றி வந்தால் போகிறது!

* * *

இம்மாதிரி முடிவுக்கு இருளப்பன் வந்த மறு மாதம் மண்ணையும் பொன்னையும் மணியையும் மறந்து, முத்தண்ண முதலியார் மறு உலகத்திற்குப் பிரயாணமாகி விட்டார். அப்பாவின் ஸ்தானத்தை அவருடைய ஏகபுத்திரன் தீனதயாளன் அலங்கரித்தான்.

சுபாவத்தில் பெயருக்கு நேர் விரோதமாயிருப்பது தான் உலக இயல்பு. அந்த இயல்புக்குத் தீனதயாளன் மாறுபட்டிருந்தது ஆச்சரியமான விஷயமே!

வி.க. -3