பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாழப் பிறந்தவன்

37

"என்ன எசமான், கேலி பண்றீங்க..."

"இல்லை இருளா! நிஜமாகத்தான் கேட்கிறேன்”

இப்பொழுதும் இருளப்பனால் நம்ப முடியவில்லை. "போதும் எஜமான்..." என்று இழுத்துக் கொண்டே சொல்லி வைத்தான்.

"சரி போ இனிமேல் நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் திருடாமலிருப்பதற்கும் என்னையும் என்னைச் சேர்ந்தவர்களையும் எந்த விதத்திலும் வஞ்சிக்காமலிருப்பதற்கும் நான் ஒரு திட்டம் போட்டிருக்கிறேன். அதையும் இப்போதே கேட்டுக் கொண்டு போ! நீ வேலை பார்க்கும் அந்தத் தென்னந் தோப்பு இனி எனக்கு மட்டும் சொந்தமல்ல; உனக்கும் சொந்தம். அதில் வரும் வரும்படியில் எனக்குள்ள பங்கு உனக்கும் உண்டு. இந்தத் திட்டம் உனக்கு மட்டுமல்ல; உன்னுடன் சேர்ந்த மற்ற தோட்டந்துரவுகளில் வேலை பார்க்கும் எல்லோருக்கும்"

இப்படிச் சொல்லும் போது தீனதயாளனின் உள்ளத்தில் அன்பு வெள்ளம் கரைபுரண்டது. அதைக் கேட்ட இருளப்பனின் உள்ளத்தில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்தது.

"எசமான்!.... எசமான்" என்று நாத்தழுதழுக்கக் கூறிக்கொண்டே இரு கரங்களையும் நீட்டிய வண்ணம் எஜமானை நெருங்கினான்.

அடுத்த நிமிஷம் அவனுடைய நீட்டிய கரங்களின் நடுவிலே தீனதயாளன் விழுந்துவிட்டான்

அன்பின் ஆனந்தத்தில் தங்களை மறந்த அவர்களின் முன்னால், தீண்டாமை அரக்கன் கூடத் தலைகாட்டவில்லை.

“...எசமான் இத்தனை நாளும் நான் சாகப் பிறந்தவன்னு நெனைச்சிருந்தேன் எசமான்...." என்று ஏதோ சொல்ல வாயெடுத்த இருளப்பன், மேலே சொல்ல முடியாமல் திணறினான்.

“ஆமாம், இருளா இனி நீ சாகப் பிறந்தவன் அல்ல, வாழப் பிறந்தவன்" என்று அவன் சொல்ல வந்ததைப் பூர்த்தி செய்தான் தீனதயாளன்.