பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

விந்தன் கதைகள்

"அதற்கு நீ வேலை பார்க்கக் கூடாது; வீட்டிலேயே அடைந்து கிடக்கணும்"

"கோவிச்சுக்காதீங்க, சாமி இன்னும் ஏதாச்சும் வேலையிருந்தாச் சொல்லுங்க; செஞ்சிட்டுப் போறேன்!”

"சரிதான்; இந்த அரிசி மூட்டையை எடுத்துக்கிட்டுப் போய் நம்ம வீட்டிலே போட்டுவிட்டுப் போடா!" என்று சொல்லி, அன்றைய கூலி ஆறணாவை எடுத்து அவனிடம் கொடுத்தார் செட்டியார்.

இப்படிக் கூலி கொடுக்கும்போதெல்லாம் செட்டியார் தினசரி தம் வீட்டு வேலை ஏதாவதொன்றைச் சின்னசாமிக்கு இடுவது வழக்கம். இந்த வேலைக்குக் கூலி கிடையாது; கூலி கொடுக்கும் வேலைக்கு இவையெல்லாம் ‘கொசுறு' வேலைகள்.

* * *

செட்டியார் ஜன்மம் எடுத்துத் தாம் விரும்பிய எத்தனையோ காரியங்களை இதுவரை சாதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒரே ஒரு காரியம் மட்டும் இன்னும் கைகூடவில்லை. அதாவது, தம்முடைய பெயர் வெறும் 'சீதாராமச் செட்டியார்’ என்றிருப்பதைவிட, ‘ராவ்பகதூர் சீதாராமச் செட்டியார்’ என்று இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று அவர் அல்லும் பகலும் அனவரதமும் கனவு கண்டுகொண்டு வந்தார். ஆனால், அதற்கு வேண்டிய முயற்சிகள் செய்வதற்குக் கையில் போதிய பணம் இல்லாமலிருந்தது.

இந்தக் குறையையும் நிவர்த்தி செய்து கொள்வதற்கு யுத்தம் என்று ஒன்று வந்து சேர்ந்தது. தான் மட்டும் வந்தால் போதாதென்று அது கட்டுப்பாடு’ என்றொரு தோழனையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு வந்தது. அதைக் காரணமாக வைத்துக்கொண்டு செட்டியார், தம்முடைய கடையை ‘கறுப்பு கடை'யாக மாற்றி விட்டார்.

அவ்வளவுதான்; அவருடைய பணப் பஞ்சம் இருந்த இடம் தெரியாமல் பறந்தது. முகத்திலும் அலாதிக்களை வீசிற்று. தன்னைப் போன்ற பெரிய மனிதர்களின் சிநேகத்தால் சுண்டெலியாயிருந்த அவர் பெருச்சாளியானார். அப்புறம் சந்தர்ப்பத்தைத் தானே சிருஷ்டித்துக் கொண்டு கண்ட இடங்களிலெல்லாம் கூட்டத்தைக்