பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

விந்தன் கதைகள்

கற்பனை செய்து கொள்வதற்குப் பதிலாக, எவ்வளவு தூரம் துன்பம் அனுபவிக்க முடியும் என்று கற்பனை செய்து பார். டாக்டரான பின் எனக்கு நிறையக் கேசுகள் கிடைத்தால் தான் ஆச்சு. இல்லாவிட்டால் துன்பத்துக்குக் கேட்க வேண்டுமா? அப்படியே கேசுகள் தான் நிறையக் கிடைக்கட்டுமே; அதனாலென்ன? துன்பந் தீர்ந்துவிடுமா? ஒரு போதும் தீராது. உன்னிடம் ஒரு நிமிஷமாவது என்னை ஒரு நோயாளியும் பேச விடமாட்டான். தூங்கும் போதுகூட, "டாக்டர் ஸார், டாக்டர் ஸார் ஆபத்து, ஆபத்து!" என்று எவனாவது வந்து கதவை இடிப்பான். இரும்பு மனம் படைத்தவன்கூட அவன் இடிக்கு அசையாமலிருக்க முடியாது. எழுந்து போக வேண்டித்தான் வரும்.

"இதோ ஒரு நிமிஷத்தில் வந்துவிட்டேன்" என்று நான் உன்னிடம் சொல்லிவிட்டுப் போவேன். ஆனால், ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகுதான் திரும்பி வருவேன். இம்மாதிரி சமயங்களில் உனக்கு என்மீது எவ்வளவு காதல் இருந்தாலும் அது காற்றாய்ப் பறந்துவிடும்.

"இப்பொழுது உன்னை இளையவளாக அடைய விரும்புபவர் வேலையிலிருந்து விலகிய சர்க்கார் உத்தியோகஸ்தர் என்று இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறது. என்னை மறந்து நீ அவரைக் கல்யாணம் செய்து கொண்டால் எவ்வளவு சந்தோஷமாயிருக்கலாம், தெரியுமா? நாள் பூராவும் அவர் உன் பார்வையிலேயே இருந்து கொண்டிருப்பார், அதனாலென்ன, அலுப்பு ஏற்பட்டுவிடுமா? அப்படி ஏற்பட்டால் நாலு குழந்தைகள் இருக்கவே இருக்கின்றன. அவற்றின் கள்ளங் கபடற்ற சேஷ்டைகள் உனக்கு எவ்வளவோ குதுகலத்தைக் கொடுக்கும். என்னைக் கல்யாணம் செய்து கொண்டால் என் அம்மாவும் அக்காவும் செய்யும் கொடுமைகள் உனக்கு என்ன குதுகலத்தைக் கொடுக்கும்?"

"இன்னொரு விஷயம்; கிழவனைக் கல்யாணம் செய்து கொண்டால் சீக்கிரம் விதவையாகி விடுவோம் என்று சிலர் நினைப்பதுண்டு; நீயே சொல்லு; வாலிபனைக் கல்யாணம் செய்து கொள்கிறவள் மட்டும் விதவையாவதில்லையா?"

“எல்லாவற்றையும் விட இந்தக் கல்யாணத்தில் இன்னொரு விசேஷம் இருக்கிறது. வாழ்க்கையில் தியாகத்தைப் போல் சிறந்தது வேறொன்றும் கிடையாது. செத்த பிறகும் வாழ வைக்கும் சிறப்பான குணம் தியாகத்தினிடந்தான் இருக்கிறது. அதுவும் உன் தங்கைக்காக நீ இந்த அற்ப தியாகத்தைக் கூட செய்யவில்லையென்றால் மனித ஜன்மம் எடுத்துத் தான் என்ன பிரயோஜனம்?