பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இன்ப துன்பம்

51

"பார்க்கப்போனால் 'இந்த உலகமே என்னத்திற்கு?' என்று எனக்குத் தோன்றுகிறது. அது இருக்கத்தானே நாம் வாழ்க்கை என்று ஒன்றை ஆரம்பித்து விடுகிறோம்? அந்த வாழ்க்கையில் காதலென்றும் சாதலென்றும் கதைத்துக் கொண்டு கண்ணிர் விடுகிறோம்? இன்பமென்றும் துன்பமென்றும் எண்ணி இன்னலுறுகிறோம்? நீயே நினைத்துப் பார் எல்லாவற்றுக்கும் காரணம் நம்முடைய கற்பனை தான். இந்தத் தொல்லை தொலைவதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. அந்த வழி துன்பத்தையும் இன்பமாகக் கருதுவதே. என்ன நான் சொன்னதெல்லாம் புரிந்ததா?" என்று கேட்டுக் கொண்டே அவர்தம் ஆசனத்தை விட்டு எழுந்தார்.

நான் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டேன். "எல்லாம் புரிந்தது. ஆனால் நீங்கள்....?" என்று இழுத்தேன்.

"நான் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன். பைத்தியக்காரனாகவும் ஆகமாட்டேன். சந்நியாசியாகவும் போகமாட்டேன். வேறொரு பெண்ணை ஜம்மென்று கல்யாணம் செய்து கொள்வேன். உன்னைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தால் என்னென்ன இன்பங்கள் அநுபவிப்பேன் என்பதற்குப் பதிலாக என்னென்ன துன்பங்கள் அநுபவிப்பேன் என்று கற்பனை செய்து கொள்வேன். ‘நல்ல வேளையாக அந்தத் துன்பங்களெல்லாம் இப்பொழுது நமக்கு இல்லையல்லவா?' என்று எண்ணிச் சந்தோஷப்படுவேன். புதுமணப் பெண்ணிடம் நான் அநுபவிக்கும் துன்பங்களைக்கூட இன்பமாகவே பாவித்துக் கொள்வேன். அதை எண்ணி யெண்ணி எனக்குள்ளேயே நான் இன்பம் அநுபவித்துக் கொள்வேன். உன்னைத் தற்செயலாக எங்கேயாவது சந்தித்தால் என் சகோதரிக்குச் சமமாகப் பாவிப்பேன்."

இதற்கு மேல் நான் அவரிடம் என்ன பேசுவது, ஹம்ஸா?

* * *

எனக்கும் அந்த சர்க்கார் உத்தியோகஸ்தருக்கும் கல்யாணமாயிற்று. அவருடைய தம்பியும் என் தங்கையைக் கல்யாணம் செய்து கொண்டு தனிக் குடித்தனம் சென்று விட்டார்.

அவர் சொன்ன முறைப்படி என் வாழ்க்கையின் இன்ப துன்பங்களைக் கற்பனை செய்து கொள்ள ஆரம்பித்தேன். என் கணவருக்கு என்னைப் பற்றியோ, என் அழகைப் பற்றியோ கவலை ஒன்றும் கிடையாது. அவருடைய கவலையெல்லாம் தம்முடைய