பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

விந்தன் கதைகள்

குழந்தைகளை நான் சரிவரக் கவனிக்கிறேனா, இல்லையா என்பதில் தான் இருக்கிறது. எவ்வளவு மேலான குணம்! என்ன பெருந்தன்மை!

"பரிமளா" என்று என் கணவர் என்னை அன்புடன் அழைக்கும்போது, அவருடைய அன்பில் நான் பேரின்பத்தைக் காண்கிறேன். "அந்தப் பாழாய்ப்போன பேரின்பம் ராஜாத்தி மாதிரி இருக்கும் உனக்கு எதற்கு?" என்று நீ என்னைக் கேட்கலாம். ஆனால், ஹம்ஸா! நான் அந்த இன்பத்தைக் கூடக் காணாமல் வேறு எந்த இன்பத்தைத்தான் காண்பேனடி?

என் கணவர் என்னை எதிர்பாராமலே படுக்கையறைக்குச் சென்று விடுவார். பின்னால் நான் பால் கொண்டு போய்க் கொடுப்பதற்குள் அவர் தூங்கி விடுவார். நானும் அவரைப் போல நிம்மதியாகத் துங்கவேண்டு மென்பதில் தான் அவருக்கு எவ்வளவு ஆசை

என் முகத்தை என் கணவர் எப்போதும் மூக்கு முழியற்ற சந்திர பிம்பத்துக்கு ஒப்பிட்டுப் பழித்ததில்லை; கண்களைக் கருவண்டுகளென்றும், கன்னங்களைக் கோவைக் கனியென்றும் சொல்லி அவர் என்னை நகைத்ததில்லை. நீயே சொல்லு; நான் அந்த வாலிபரான டாக்டரைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தால், அவர் என்னை அப்படியெல்லாம் சொல்லிப் பழிக்காமலிருப்பாரா?

சமய சந்தர்ப்பமின்றிச் சதா தம்பதிகளைக் கவனிப்பதிலேயே கண்ணுங் கருத்துமாக யிருக்கும் மாமியார், நாத்தனார் முதலியவர்களுடன் குடித்தனம் செய்வதை விட, இந்த நாலு குழந்தைகளுடன் கூடிக் குடித்தனம் செய்வது எவ்வளவோ மேலாயிருக்கிறது. அவை, "அம்மா! அம்மா!" என்று தங்கள் அமுத கானத்தால் என்னை அழைக்கும் போதெல்லாம் நான் என்னையே மறந்து இன்ப சாகரத்தில் ஆழ்ந்து விடுகிறேன்.

ஆகக்கூடி அவர் சொன்ன முறையில் நான் வெற்றியைத்தான் காண்கிறேன். இதுதான் என் வாழ்க்கையில் நான் மலர்ந்த முகத்துடன் இருப்பதன் ரகசியம், ஹம்ஸா!

இது உனக்குப் பிடிக்கவில்லை யென்றால், அதற்கு நான் என்ன செய்வது?



இப்படிக்கு,



உன்னை என்றும் மறவாத,



பரிமளா