பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

விந்தன் கதைகள்

மாலை நேரத்துக்குள் அவர்கள் எப்படியாவது நான்கு கட்டில்கள் செய்து விடுவார்கள். வேலப்பன் இரண்டைத் தூக்கித் தன் தோள்களின் மேல் வைத்துக் கொள்வான்; முருகாயி இரண்டைத் தூக்கித் தன் தோள்களின் மேல் வைத்துக் கொள்வாள். வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி குழந்தைகளுக்கு உத்தரவிட்டுவிடுவார்கள். "கட்லு, கட்லு!" என்று கூவிக்கொண்டே தெருத் தெருவாய்ச் செல்வார்கள்.

இருட்டுவதற்குள் நான்கு கட்டில்களும் விற்றுவிடும். லாபத்தைப் பற்றித் திட்டமாகச் சொல்ல முடியாது; ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கிடைக்கும்; இன்னொரு நாளைக்கு நான்கு ஐந்துகூடக் கிடைக்கும்; இந்த லாபத்தைக் கொண்டு, பங்களா, கார், காவற்காரனோடு வாழாவிட்டாலும் அவர்கள் பசியாமல் வாழ்ந்தார்கள்.

மாந்தோப்புக்குச் சொந்தக்காரரான மாதவராயர் வெகு நாட்களாக வேலப்பனின் வேலையைக் கவனித்து வந்தார். ஒருநாள் அவருக்கு ஒரு யோசனை தோன்றிற்று அந்த யோசனையுடன் அவர் வேலப்பனை நெருங்கி, "என்ன வேலப்பா தினசரி வெய்யிலில் இப்படி வியர்க்க விறுவிறுக்க வேலை செய்கிறாயே, உனக்குச் சிரமமாயில்லையா?” என்று கேட்டார்.

"சிரமத்தைப் பார்த்தா ஆகுதுங்களா? வயிறுன்னு ஒண்ணு இருக்கே" என்றான் வேலப்பன்.

"மவராசாவின் மாந்தோப்பு இருக்கும்போது எங்களை வெய்யில் என்ன செய்யும்?" என்றாள் முருகாயி.

"என்ன இருந்தாலும் மாட்டை மேய்த்தோமா? கோலைப் போட்டோமா? என்று எங்கேயாவது வேலைக்குச் சென்று நாளைக் கழித்துவிட்டு, மாதம் பிறந்தால் ஐம்பது, அறுபது என்று சம்பளம் வாங்கிக்கொண்டு ‘ஹாய்"யாகக் குடித்தனம் பண்ணும் செளகரியம் வருமா? உன்னுடன் உன் மனைவியும் கஷ்டப்பட்டு, உங்களுடன் உங்கள் குழந்தைகளும் கஷ்டப்பட்டு, மாலை முழுவதும் தெருத் தெருவாய்ச்சுற்றி நீங்கள் அடையும் சுகந்தான் என்ன? வேனுமானால் முருகாயியை ஒரு மாதம் நிழலில் இருக்கச் சொல்லிப் பாரு; அப்புறம் நீ அவளை விட்டு அந்தண்டை இந்தண்டை போகவே முடியாது" என்று சொல்லி விஷமத்துடன் சிரித்தார் மாதவராயர்.

முருகாயியை வெட்கம் பிடுங்கித் தின்றது. அவள், "போங்க, சாமி!" என்று சொல்லிக் கொண்டே சிரிக்காமல் சிரித்தாள்.