பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்க வளையல்

63

சிறிது நேரத்திற்கெல்லாம் நான் ஜட்காவாலாவின் வீட்டை அடைந்தேன். அவனுடைய வீடு மீர்சாஹிப் பேட்டையில் ஒர் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. உதிர்ந்து போன ஓலைக் கூரையும், கதவுகளுக்குப் பதிலாகத் தொங்கவிடப் பட்டிருந்த கோணிக் கந்தைகளும் அவனுடைய தரித்திர நிலையை எடுத்துக் காட்டுவனவாயிருந்தன. பெருமழையின் காரணமாகத் தாழ்வாரத்தில் கட்டிப்போட்டு வைத்திருந்த வெள்ளாடு ஒன்று, அவனைக் கண்டதும் குட்டிகளுடன் சேர்ந்து, ‘அம்மே, அம்மே!’ என்று பரிதாபத்துடன் கத்திற்று. அந்தக் கத்தலைக் கேட்டுத் தன்னுடைய அப்பா வந்திருந்ததை அறிந்து கொண்டவள் போல் ஒரு பெண் உள்ளேயிருந்து ஓடோடியும் வந்தாள். அவளுடைய முகத்தில் இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு வேதனை குடி கொண்டிருந்தது.

இந்தச் சமயத்தில் யாரோ ஒருவன் வீட்டு வாயிலில் நின்று கொண்டு, “அலிகான்!” என்று இரைந்தான். அவனைப் பார்த்தால் ஈட்டிக்காரன் போல் தோன்றிற்று. உடனே ஜட்காவாலா விரைந்து சென்று அவனிடம் ஏதோ சில்லறையைக் கொடுத்து அனுப்பினான். அவன் சென்றதும் “அஜ்ஜா!” என்றான் அலிகான். “இருக்கிறேன்!” என்றாள் அவள் வெறுப்புடன்.

அவளுடைய வெறுப்பைப் பொருட்படுத்தாமல் “இரண்டு நாட்களாக என்னைக் காணாமல் என்ன செய்தாய், அஜ்ஜா ஏதாவது சாப்பிட்டாயா?” என்று கேட்டான் அவன்.

“எப்படிச் சாப்பிடுவது? எங்கிருந்து சாப்பிடுவது?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.

அலிகான் நான் இருந்த பக்கம் திரும்பி, “குழந்தைக்கு என்மேல் ரொம்பக் கோபம்!” என்று அசட்டுச் சிரிப்புடன் சொல்லிவிட்டு “உம்... அது இருக்கட்டும், அஜ்ஜா! இவர் சிங்கப்பூர் ஆசாமி. இரவு இங்கே தங்கச் சொல்லியிருக்கிறேன். இப்பொழுது இவருக்கும் சேர்த்து ஏதாவது தயார் பண்ணு!” என்று எட்டணாவை எடுத்து அஜ்ஜாவின் கையில் கொடுத்தான். அவள் அதை வாங்கிக்கொண்டு என்னை ஏற இறங்கப் பார்த்தாள். நான் ஒரு ரூபாயை எடுத்து அலிகானிடம் கொடுத்து அவளிடம் கொடுக்கச் சொன்னேன். அவன் அதை வாங்கித் தன் பையில் போட்டுக் கொண்டான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் கூடையை எடுத்துக் கொண்டு அஜ்ஜா கடைக்குப் புறப்பட்டபோது “எனக்கென்னமோ இன்று உடம்பு