பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மனித யந்திரம்

ன்றொரு நாள் பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிந்த போது, “காலணா இருந்தால் கொடுங்க, ஐயா!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். சின்னஞ் சிறு சிறுமி ஒருத்தி எனக்குப்பின்னால் நின்று கொண்டிருந்தாள் அவளைப் பார்த்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் அவள் என் நண்பன் சிவராமனின் செல்வக் குழந்தை இந்தக் கதி அவளுக்கு எப்படி நேர்ந்தது?

“கஸ்தூரி என்னைத் தெரிகிறதா, உனக்கு?”

“தெரிகிறது மாமா!”

“அம்மா, அப்பா எல்லாம் எங்கே இருக்கிறார்கள்?”

“அம்மா வீட்டில் இருக்கிறாள்; அப்பா ஆஸ்பத்திரியிலே இருக்கிறார்”

“அப்பா ஏன் ஆஸ்பத்திரிக்குப் போனார்?”

“அவருக்குக் கால் என்னத்துக்கோ நடக்க வராமற் போச்சு; அதாலே அவர் ரெண்டு மாசமா ஆஸ்பத்திரியிலே தான் இருக்கிறார்”

“சரி வா வீட்டுக்குப் போகலாம்” என்று நான் அந்தச் சிறுமியை கூட்டிக் கொண்டு சென்றேன்.

***

சிவராமன் ‘பரஞ்சோதி மில்ஸ்’ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்; மாதம் முப்பது ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளத்தைக் கொண்டு அவன் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது!

வாரத்தில் ஆறு நாட்கள் தண்ணீர்ச் சாதம் சாப்பிட்டாலும் ஒரு நாளாவது அவன் வத்தக் குழம்புச் சாதம் சாப்பிட வேண்டும். நடு நடுவே உடம்புக்கு ஏதாவது வந்தால் அதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். மாமாங்கத்துக்கு ஒரு முறையாவது புதுப்புடவை எடுத்துக் கொடுப்பதின் மூலம் தன் மனைவியின் மனதை அவன் திருப்தி செய்ய வேண்டும். தங்க வளையல்களுக்குப் பதிலாக கண்ணாடி வளையல்களாவது வாங்கிப் போட வேண்டும். சினிமா, நாடகம், சர்க்கஸ் போன்ற தமாஷாக்களை அவளும் அவள் குழந்தைகளும் அவர்களுடைய ஜன்மத்தில் ஒரு தடவையாவது பார்க்கச் செய்ய வேண்டும். தன் பெண் விளையாடுவதற்காக அவன்