பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

விந்தன் கதைகள்

எந்த முதலாளியும் செலவழிக்கத் தயாராயிருக்கிறான். ஆனால் வாழ்நாட்கள் முழுதும் தன்னிடம் நாயா யுழைத்த ஓர் ஏழைத் தொழிலாளி வேலை செய்வதற்கு லாயக்கில்லாமற் போனால், அவனுக்காக ஒரே ஒரு ரூபாய் செலவழிக்கக்கூட மனம் வருவதில்லை! - மனிதன் என்ன யந்திரத்தைவிட அவ்வளவு மட்டமானவனா? இரும்பு யந்திரத்தை வேண்டுமானால் மனிதன் நினைத்தால் சிருஷ்டித்துவிடலாம்; மனித யந்திரத்தை மனிதன் நினைத்தால் சிருஷ்டித்துவிட முடியுமா? - இவ்வாறு எண்ணமிட்டுக்கொண்டே நான் உட்கார்ந்திருந்த போது, நொண்டி நொண்டி நடந்த வண்ணம் உள்ளே நுழைந்தான் என் நண்பன். “என்னப்பா இது?” என்றேன் நான்.

“வேறொன்றுமில்லை; கடவுளின் கருணை - அவன் அருளால், என் கைகளும் கால்களும் இனிமேல் சரிப்பட்டு வராதென்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்!”- என்றான் அவன் விரக்தியுடன்.

“ஆ!” என்று அலறினாள் அவன் மனைவி. “அப்படின்னா இனிமே அப்பாவாலே வேலைக்குப் போகமுடியாது!” என்று முத்தாய்ப்பு வைத்தாள் குழந்தை கஸ்தூரி.

“ஆமாம் அம்மா! இனிமேல் உன்னோடு நானும் சேர்ந்து பிச்சை எடுக்க வேண்டியது தான்!” என்றான் அவன்.

என் கண்களில் நீர் துளிர்த்தது. அதற்குமேல் என்னால் ஒரு கணம்கூட அங்கே உட்கார்ந்து கொண்டிருக்க முடியவில்லை; எழுந்து நடையைக் கட்டினேன்.