பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ரிக்ஷாவாலா

சென்ற வருடம் கைலாசநாதர் கோயிலுக்குச் சென்ற நேயர்கள், அந்தத் தோட்டக்காரக் கிழவனைப் பார்த்திருக்கலாம். அந்த வயோதிகனின் பெயர் காளிமுத்து; வயது அறுபதுக்கு மேலிருக்கும். தளர்ந்து மெலிந்த அவன் சடலத்தில் ஏதோ சஞ்சலம் ஊறிக் கிடந்தது. அந்தச் சஞ்சலத்தின் சாயை, அவனது வாடி வதங்கிய வதனத்தில் எப்பெர்ழுதும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

அந்தக் கோயிலில் காசிலிங்கப் பண்டாரம் என்று ஒருவன் இருந்தான். சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்காகச் சாதம் சமைத்து வைப்பது, பூசை நேரத்தில் மணி அடிப்பது, கோயிலைக் கூட்டிச் சுத்தமாக வைப்பது முதலியன அவனுடைய வேலைகள்.

ஒரு நாள் காசிலிங்கம், “என்ன சுவாமி! இந்த ஏகாந்த வாழ்வில் ஒரு கவலைக்கும் இடமில்லையே? அப்படி இருக்கும்போது, தங்களுடைய மனம் ஏன் சதா சஞ்சலத்தில் உழன்று கொண்டிருக்கிறது?” என்று காளிமுத்துவைக் கேட்டான்.

ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு “சஞ்சலம் என்ன சுவாமி...!” என்று ஆரம்பித்தான் காளிமுத்து. துக்கம் அவனது தொண்டையை அடைத்தது. அவன் ஏதோ கதை சொல்லப் போகிறான் என்பதை ஊகித்துக் கொண்ட காசிலிங்கம், கிழவனின் முகத்தையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை; கிழவன் இரண்டு துளி கண்ணிர் விட்டபிறகு, தன்னுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

***

"ரிக்ஷா இழுத்துப் பிழைக்கும்படிதான் என்னை என் பெற்றோர் வளர்த்திருந்தார்கள். வாலிபம் இருக்கும் வரையில் அந்தத் தொழில் எனக்கு வழிகாட்டிக் கொண்டு வந்தது. அதற்குப் பிறகு என் வண்டியில் ஏறி என்னை ஆதரிப்பதற்குப் பதிலாக சிலர் என்னைக் கண்டதும் இரக்கப்பட்டார்கள். வேறு சிலர் “இவன் அவசரத்துக்கு உதவாத ஆசாமி!” என்று தங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போய்விட்டார்கள். ஆனாலும் அந்தத் தொழிலை விட்டால் எனக்கு அப்போது வேறு கதி ஒன்றும் இல்லாமலிருந்தது.

ஒரு சமயம் தொடர்ந்து மூன்று நாட்கள் வரையில் எனக்குப் போதிய சவாரி கிடைக்கவில்லை வண்டிக்காரனுக்கு வாடகை கொடுப்பதற்கே வழியில்லாமல் போய்விட்டது. நான்காவது நாள் நாலணாவுக்குக்கூட வழியில்லாமல் தெருவெல்லாம் சுற்றி யலைந்த