பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தப்பா

75

கஷ்டமாயிருந்தது. அதற்குக் கூட வழி காட்டியவன் எனது பள்ளிக்கூடத்து நண்பனான சுந்தர்தான். அவன் டெல்லியில் பிரசித்தி பெற்ற ஓர் ஆங்கில வாரப் பத்திரிக்கையில் மாதம் இருநூறு ரூபாய் சம்பளமாகப் பெறும் பேர் போன ஒவியக்காரன்; அவனும் தன்னால் ஆன மட்டும் எனக்கு எங்கேயாவது மாதச்சம்பளத்தில் வேலை தேடிக் கொடுக்க வேண்டும் என்று முயன்று வந்தான்; முடியவில்லை.

அதிகமாய்ப் போனால் மாதம் பத்துப் பதினைந்து ரூபாய்க்கு மேல் எனக்கு வரும்படி கிட்டாது. இது அப்படியே எனது சித்தாப்பாவுக்கு அர்ப்பணமானாலும் அவருக்குக் கொஞ்சம் திருப்தியாயிருக்கும். அதற்கும் குறுக்கே இருந்தது எனது ஒரே ஒரு தம்பியின் படிப்பு. “இப்படியிருந்தால் எந்தச் சித்தப்பாவுக்குத்தான் அதிருப்தி இல்லாமலிருக்கும்!” என்று என்னை நானே தேற்றிக் கொள்வேன்.

***

ரு நாள் என்னவோ அவளும் நானும் மணக் கோலத்தில் இருப்பது போல் படம் போட்டுப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை உண்டாயிற்று. போட்டுப் பார்த்தேன்; வெகு நன்றாக அமைந்து விட்டது. எனது அறையில் உட்கார்ந்துகொண்டே அந்தப் படத்தை இப்படியும் அப்படியுமாக வைத்துப் பைத்தியக்காரன் மாதிரி பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில் அடுப்பங்கரையில் இருந்தபடி சித்தி என்னைக் கூப்பிடவே, அதை அப்படியே மேஜைமீது வைத்துவிட்டு நான் எழுந்து சென்றேன். திரும்பி வருவதற்குள் அந்தப் படத்தை நீலா எடுத்துக் கொண்டு போய்விட்டாள். எனக்கு அவளிடமிருந்து எப்படியாவது அதைப் பிடுங்கிக் கொள்ள வேண்டுமென்று தோன்றிற்று. எப்படிப் பிடுங்கிக் கொள்வது? சித்தி வீட்டில் இருக்கிறாளே!

நல்ல வேளையாகப் பக்கத்து வீட்டில் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகும் பெண்ணுக்கு நலங்கு வைக்கிறார்கள் என்பதற்காகச் சிறிது நேரத்திற்கெல்லாம் சித்தி சென்றுவிட்டாள். அதுதான் சமயம் என்று நான் மெல்ல அவளது அறையின் பக்கம் சென்று எட்டிப் பார்த்தேன். அப்பொழுது அந்தப் படத்தை வைத்துக் கொண்டு அவள் வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீலா!” என்றேன்.

திரும்பிப் பார்த்தாள். “இந்தப் படத்தில் இருப்பவர்கள் யாரோ?” என்று ஏதும் அறியாதவள் போல் என்னைக் கேட்டாள்.