பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

விந்தன் கதைகள்

வீட்டு கூடத்தின் ஒரு மூலையில் சோகமே உருவாய் நின்று கொண்டிருந்தாள் நீலா. அந்த நிலையில் அவளைப் பார்க்க எனக்குப் பரிதாபமாயிருந்தது. அவள் குறிப்பை ஒருவாறு அறிந்து கொண்டவன் போல் “என்னைக் கல்யாணம் செய்துகொள்ள உனக்கு இஷ்டமில்லையல்லவா?” என்று கேட்டான் சுந்தர்.

“ஆ... மா...!” என்று மென்று விழுங்கிக் கொண்டே சொன்னாள். இதைக் கேட்டதும் சித்தப்பாவின் கண்களில் தீப்பொறி பறந்தது. “பின் யாரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?” என்று அவர் கர்ஜித்தார்.

“அத்தா....னைத்....தான்!” என்று இழுத்தாள் நீலா.

“இந்தச் சாப்பாட்டு ராமனையா?”

“ஆமாம், மாமா!” அதற்குள்

“அட! உன்னை வீட்டில் வைத்துக் கொண்டா வரனாகத் தேடிப் பிடித்தார்கள்?” என்றான் சுந்தர் ஆச்சரியத்துடன்.

“ஆமாம், நான் வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேனோ, இல்லையோ? அதனால் அவளும் எனக்கு வாழ்க்கைப்பட்டு ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று சித்தப்பா நினைத்தார்” என்று நான் அவனுக்குச் சமாதானம் கூறினேன்.

“இதெல்லாம் வாழ்க்கையில் சகஜந்தானே எனக்கு மட்டும் என்றைக்கும் வேலையிருக்குமென்பது என்ன நிச்சயம்? ஆனால், இனிமேல் உனக்கும் ஒன்றும் கஷ்டமில்லை. எங்கள் பத்திரிக்கை இம்மாதத்திலிருந்து வாரம் இருமுறையாக வருகிறது. இன்னொரு ‘ஆர்ட்டிஸ்ட்’ தேவை என்றார்கள். உன்னைப் பற்றிச் சொன்னேன். ‘சரி’ என்று ஒப்புக் கொண்டார்கள். எடுத்ததும் சம்பளம் நூறு ரூபாய். கடிதம் இன்று வரும் என்றேனே, அந்தக் கடிதத்தில் இதைத்தான் எழுதியிருக்கிறேன். ஆகவே எனக்குக் கல்யாணம் ஆவதற்குள் நீயும் இந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு என்னுடன் டெல்லிக்குக் கிளம்பத் தயாராயிரு!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் சுந்தர்.

அவனுடைய சிரிப்பில் எனது சித்தப்பாவும் எதிர்பாராத விதமாக கலந்து கொண்டார்.

நான் நீலாவைப் பார்த்தேன்; நீலா தரையைப் பார்த்தாள்!