பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பத்தினித் தெய்வம்

துணியை துவைத்துப் பிழிந்து தோளில் போட்டுக் கொண்டாள்; குளித்து முழுகிக் கூந்தலை விரித்து விட்டுக் கொண்டாள்; குடத்தில் நீரை நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டாள்; குனிந்த தலை நிமிராமல் குளத்தங் கரையிலிருந்து வந்து கொண்டிருந்தாள்.

குடும்பப் பெண்; குறுகுறுப்பான பார்வை; கண்ணிமைகள் கொட்டும்போது யாரையோ ‘வா,வா’ என்றழைப்பது போலிருந்தது. நகை முகம்; குழி விழுந்த கன்னங்கள்; நடக்கும் கைவீச்சில் ஒரு கவர்ச்சி; நடையிலே ஒரு சிருங்காரம்; நடுநடுவே தண்ணீர் ‘தொளக், தொளக்’ என்று தளும்பும் சத்தம்.

அவள் பெயர் முத்தம்மா. ஆண்டியப்பனுக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகிப் பத்து மாதங்கள்தான் ஆகியிருந்தன.

‘முத்தம்மா’ - இப்படி அவளுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல். திரும்பிப் பார்த்தான். ஒரு காலத்தில் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருந்த சாத்தப்பன் அங்கே நின்று கொண்டிருந்தான்.

‘இவன் எப்படி இங்கே வந்தான்? - இவ்வாறு யோசித்துக் கொண்டே முத்தம்மா பேசாமல் நின்றாள். சாத்தப்பன் ஆசாபாசத்தோடு அவளை நெருங்கினான்.

“என்னா, முத்து நல்லாயிருக்குதில்லே, நியாயம்?”

“நான் என்ன செய்வேன்?”

“என்ன செய்வேனா? ‘கட்டிக்கிட்டா உன்னைத்தான் கட்டிக்குவேன். இல்லாட்டா கிணத்திலாச்சும் குட்டையிலாச்சும் விழுந்து சாவேன்’னு சொன்னியே. மறந்துட்டியா!”

“என்னமோ, எல்லாரும் சொல்லிக்கிட்டாப்போல நாமும் சொல்லிக்கிட்டோம்...”

“ஓஹோ! நீ என்மேலே வச்சிருந்த ஆசையெல்லாம் அம்மட்டுந்தானா?”

“ஆசையிருந்தாப் போதுமா தமயந்திக்காக சுயம்வரம் வச்சாங்க; அவ தனக்குப் பிடிச்ச நளமகாராசனுக்கே மாலையிட்டா என் கல்யாணத்துக்கு அப்படியா வச்சாங்க, நான் உனக்கே மாலையிட?”