பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

விந்தன் கதைகள்

“சுயம்வரம் வச்சாத்தானா? பொம்மியம்மா மதுரைவீரன் சாமியோடே ஓடிவந்த மாதிரி நீ என்னோடே ஓடி வந்துட்டா, என்னா?”

“ஐயோ! அப்படிச் சேஞ்சா நாலு பேரு என்னா சொல்லுவாங்க? அதாலே உனக்கும் கெட்ட பேரு; எனக்கும் கெட்ட பேருதானே?”

“நல்லாச் சொன்னே! இப்போ பொம்மியம்மாவுக்கும் மதுரைவீரன் சாமிக்கும் ஊரிலே கெட்ட பேரு வந்துடுத்தா?”

“சாமியும் நாமும் ஒண்ணா? ஊரிலே பார்த்தா ஒருத்தர் மேலே ஒருத்தர் ஆசை வச்சுக் கல்யாணம் பண்ணக்கிட்டவங்களும், தாய் தகப்பன் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சவங்களும் ஒரே மாதிரியாய்த் தான் இருக்காங்க! இப்போ கல்யாணம் பண்ணிக் கிட்டேனே, அந்த மனுசரும் என்னை ஒண்ணும் சிம்மாசனத்திலே உட்காரவச்சிச் சோறு போடலே; இல்லே, உன்னையே கல்யாணம் செஞ்சிக்கிட்டிருந்தாலும் நீயும் என்னை ஒண்ணும் சிம்மாசனத்திலே உட்கார வச்சிச் சோறு போடப் போகிறதில்லே அன்னிக்கே ஆணுக்கு இப்படி பெண்ணுக்கு இப்படின்னு தலையிலே எழுதி வச்சானே, அந்தப் பிரம்மன் எழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும். அதாலே, நடந்து போச்சு: இனிமே என்னை நீ மறந்துடு...”

அதற்குள் பொறுமையை இழந்துவிட்ட சாத்தப்பன், “நானா மறந்துடுவேன்?” என்று சொல்லிக்கொண்டே முத்தம்மாவின் கரத்தைப் பற்றினான்.

“சீ விடு, விடு!” என்று அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு ‘விர்’ரென்று வீட்டை நோக்கி நடந்தாள் முத்தம்மா.

* * *

ன்னதான் சாத்தப்பன் தன்னைக் காதலித்திருந்தாலும் நான் இன்னொருவனுக்குச் சொந்தமான பிறகு அவன் தன் கரத்தைப் பலவந்தமாகப் பற்ற வந்ததை முத்தம்மா வெறுத்தாள். “இப்படியுமா அவனுக்குப் புத்தி கெட்டுப் போய்விடும்?” என்று எண்ணிக்கொண்டே அவள் தன் வீட்டை நெருங்கியபோது, வாசலில் ஒரு கட்டை வண்டி வந்து நின்று கொண்டிருந்தது. அந்த வண்டி தன் பிறந்தகத்தின் வண்டி என்று தெரிந்ததும் அவள் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தாள்.

யாரையும் அங்கே காணவில்லை; வண்டிக்காரன் தான் நின்று கொண்டிருந்தான்.