பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்தினித் தெய்வம்

81

”என்னடா சங்கதி?”

“அம்மா ரொம்பக் காயலாக் கிடக்கிறாங்க; உங்களை உடனே அழைச்சுக்கிட்டு வரச் சொன்னாங்க!”

“ஐயய்யோ அவருகூட வீட்டிலே இல்லையே! மாடு பிடிக்கப் போயிருக்காரு. அவருக்கிட்டே ஒரு பேச்சுச் சொல்லாமெ வரலாமா?”

“ஆபத்துக்குப் பாவமில்லே, அம்மா! அண்டை அசல்லே சொல்லிவிட்டு வந்தா, அவர் வந்ததும் சொல்லுவாங்க இல்லே?”

“அப்படியா ரொம்பக் காயலாக் கிடக்கிறாங்க!”

“ஆமாம், அம்மா இப்பவே நீங்க வந்தாத்தான் அந்த அம்மாவை உசிரோடு பார்க்கலாம்?”

“அட, பாவமே! இந்தச் சேதியையா இவ்வளவு தாமசமா சொன்னே? ஓடு, ஓடு போ, உடனே வண்டியைக் கட்டு இதோ எதிர்வீட்டுச் சின்னம்மாகிட்ட இந்தச் சேதியைச் சொல்லிவிட்டு நான் வர்றேன்” என்று வெலவெலக்க ஓடினாள் முத்தம்மா.

* * *

‘லொடுக்கிட்டி, லொடுக்கிட்டி என்று தனக்குத் தானே பாஷையில் ஏதோ பாடிக் கொண்டே வண்டி நெடு நேரம் போய்க் கொண்டிருந்தது. எனினும் வழி மாளவில்லை; அந்திவேளை மட்டும் மாய்ந்துவிட்டது; ஒரே அந்தகாரம்; வண்டிக்காரன் மாட்டை அதட்டி ஒட்டும் ஒசை சத்தத்தைத் தவிர வேறு சத்தமேயில்லை.

“டேய், நிறுத்து வண்டியை!” இப்படித் திடீரென்று ஓர் உத்தரவு. வண்டிக்காரன் வண்டியை நிறுத்தி விட்டான்.

அதே கணத்தில் முத்தம்மாவின் கரத்தைப் பிடித்து யாரோ ஒருவன் கரகரவென்று இழுத்தான்.

“ஐயய்யோ!” என்று அலறினாள் முத்தம்மா.

“அஹ்ஹஹ்ஹா” என்று சிரித்தான் சாத்தப்பன். அவனுக்குப் பின்னால் யாரோ அவனைப் போலவே சிரிக்கும் சத்தம் கேட்கிறதே, யார் அது கவனித்துப் பார்த்தாள் முத்தம்மா. வண்டிக்காரன் சிரித்துக் கொண்டிருந்தான்!

“அட மோசக்காரப் பாவி”

* * *

வி.க. -6