பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தங்கமே தங்கம்


 “தங்கத்தாலே காப்புப் போட்டுத்
தங்கமே தங்கம் - உனக்குத்
தாலிகட்டப் போறேனே நான்
தங்கமே தங்கம்!”

ந்தப் பாட்டு நந்தபாலனுக்கு நினைவு வந்ததும் அவன் முகத்தில் ஓர் அலாதிக் களை தோன்றி அவனை ஆனந்த சாகரத்தில் ஆழ்த்தியது. அடுத்த கணம் எங்கேயோ பிறந்து வளர்ந்து கடைசியில் கழைக் கூத்தாடியான தன் கதையை நினைத்தபோது அவனுடைய ஆனந்தம் இருந்த இடம் தெரியாமல் பறந்தது.

ஒரு சமயம் கம்பத்தின் உச்சியில் நின்று கரணம் போட்டுக் கொண்டிருந்த நந்தபாலன் தவறிக் கீழே விழுந்து விட்டான். அவன் காலில் பலமான அடி பட்டு விட்டது. உடனே அவன் சிகிச்சை பெறுவதற்காக அந்த ஊரிலிருந்த ஒரு பாதிரிமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். சிறிது குணமாயிருக்கவே அவன் ஆஸ்பத்திரியின் பின்புறத் தோட்டத்தின் டாக்டரின் உத்தரவுப்படி நடைவண்டியைத் தள்ளிய வண்ணம் உலாவிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் தான் மேலே குறிப்பிட்ட பாட்டு நந்தபாலனின் நினைவுக்கு வந்தது. உடனே அவன் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான்.

எத்தனையோ கதைகளில் எத்தனையோ கதாநாயகர்களுக்கு நேர்ந்த கதி தான் நந்தபாலனுக்கும் நேர்ந்திருந்தது. சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்துவிட்ட அவன் தனக்குத் தூரபந்துவும் மாமன் உறவினனுமான கோவிந்தக் கோனான் வீட்டில் வளர்ந்து வந்தான். தங்கம் அவனுடைய மாமாவின் பெண். தினசரி இருவரும் சேர்ந்து ஆடுமாடுகளை மேய்க்கச் செல்வார்கள். மலைப்புறத்தில் அவற்றை மேய விட்டுவிட்டுத் தங்களுக்குப் பிடித்தமான ஓர் ஆலமரத்தடிக்கு அவர்கள் வருவார்கள். அருகருகே தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு ஆலம் விழுதுகளுக்கு மத்தியில் ஒரு கனத்த கம்பைக் கட்டி நந்தபாலன் ஊஞ்சல் ஜோடிப்பான். அதில் தங்கத்தை உட்கார வைத்துத் தள்ளிவிடும்போதுதான் அவன் முதன்முதலில் குறிப்பிட்ட பாட்டைப் பாடுவது வழக்கம். தங்கம் அந்தப் பாட்டை விரும்பாதவள் போலத் தன் முகத்தைக் கோணிக் கொண்டு “ஊம், நான் அழுவேன்!” என்று நந்தபாலனைப் பயமுறுத்துவாள்.