பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செந்தமிழ் நாட்டிலே

89

‘ஒரே புத்தகத்தை ஒன்பது பதிப்புகள் போட்டு லாபம் சம்பாதித்தாலும், அந்தப் புத்தகத்தை எழுதியவருக்கு ஒரே ஒரு தடவைதான் சன்மானம் கொடுப்போம்!” என்னும் சட்டத்தைத் தங்கள் பிறப்புரிமையாகக் கருதும் பிரசுரகர்த்தர்கள் கூட, திரு. சதானந்தத்தை அவருடைய வாழ்நாளில் ஆதரிக்கவில்லை.

பாமர மக்கள் அவருடைய எழுத்தைப் பாராட்டுவதோடு நின்றுவிட்டனர். பணக்காரர்கள் அதுகூடச் செய்யவில்லை; பட்டம் பதவிக்காகவும், பெருமை, புகழுக்காகவும் அவர்கள் பணத்தை வாரியிரைத்தனர். படித்தவர்கள் அவருடைய எழுத்தைப் பார்ப்பதுகூட இல்லை. அவர்களுடைய பார்வையெல்லாம் மேல் நாட்டு இலக்கியகர்த்தாக்களின் மேல் இருந்தது.

பொறாமையே உருவான எழுத்தாளர் உலகமோ அவர் தொண்டுக்கு மாசு கற்பிப்பதையே தன் பொழுது போக்காகக் கொண்டிருந்தது.

இதனாலெல்லாம் திரு. சதானந்தம் தம்முடைய வாழ்நாளில் பட்ட துன்பமும் துயரமும் கொஞ்சமன்று. எழுத்தையே மூலதனமாகக் கொண்ட அவர், வேறு தொழில் ஏதாவது செய்து வாழ்வதற்கும் தகுதியற்றவராயிருந்தார்.

வருடத்தில் ஒரு மாதமாவது திரு. சதானந்தம் தம் மனைவியுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தியதில்லை. “அவள் நம்மை விட்டுப் பிறந்தகம் போனால் போதும்!” என்று அவர் இருப்பார். “அவர் நம்மைப் பிறந்தகம் போகச் சொன்னால் போதும்” என்று அவள் இருப்பாள்.

இந்த லட்சணத்தில் அவருக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள்.

இத்தனைக்கும் சதானந்தத்தின் மனைவி, சந்திரமதியின் கதையைப் படித்துத்தான் இருந்தாள். ஆனாலும் அவளால் எப்பொழுதும் அந்தக் கதையின் கருத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்க முடியவில்லை. சில சமயம் அவளுக்குத் தாங்க முடியாத ஆத்திரம் வந்துவிடும். தன் கணவனைக் கோபித்துக் கொள்வாள். இம்மாதிரி சமயங்களில் “காதல் கீதல் எல்லாம் வெறும் கதைகளில் மட்டும் இருக்கட்டும்” என்று எண்ணியவராய், திரு. சதானந்தம் தம் நெற்றிக்கண்ணைக் காட்டுவதன் மூலம் நிலைமையைச் சமாளித்துக் கொள்வார்.

அதற்கேற்றாற்போல் வறுமைப் பேய் அவரை வதைத்தது. குழி விழுந்த கண்களையும் கூன் வளைந்த முதுகையும் பார்த்துக் கூட அந்தப் பாழும் பேய்க்கு மனம் இரங்கவில்லை.