பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செந்தமிழ் நாட்டிலே 91

சொல்லிக் கொண்டனர்; அவர் வீட்டில் தங்காதவர்களெல்லாம் தங்கியதாகச் சொல்லிக் கொண்டனர்.

அவர் ‘களுக்’கென்று சிரித்ததும், ‘கணீ’ரென்று இருமியதுங் கூடக் கட்டுரைகளாயின!

மனம் நொந்து அவர் தம் மனைவிக்கும், மற்றவர்களுக்கும் எழுதிய கடிதங்களெல்லாம், மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கக் கூடிய மாபெரும் வேத வசனங்களாகப் போற்றப்பட்டன!

எப்பொழுதோ ஒரு சமயம் நாயைத் தட்டிக் கொடுத்ததற்காக அவரை ‘நான்முகன்’ என்று புகழ்ந்தனர்; பூனையைத் தடவிக் கொடுத்ததற்காகப் ‘புத்தர்’ என்று போற்றினர்.

பத்திரிகாசிரியர்களும், பிரசுரகர்த்தர்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு அவர் எழுதி வைத்துவிட்டுச் சென்ற கட்டுரைகளையும், கதைகளையும் ஆயிரம் ஆயிரமாகக் கொடுத்து வாங்கினர்.

நவயுக எழுத்தாளர்கள் தம்முடைய கதை, கட்டுரைகளில் அவரைப் பிதற்றி வைத்திருந்த தனித் தமிழ்ச் சொற்களையெல்லாம் பொறுக்கியெடுத்து, அவற்றுக்கெல்லாம் தனித்தமிழ் அர்த்தம் கண்டு பிடித்துத் தனித் தமிழ் அகராதி ஒன்று வெளியிட்டனர்.

“உங்கள் அப்பாவைப் பற்றி தெரிந்ததை எழுதிக் கொடுங்கள்” என்று எத்தனையோ பிரசுரகர்த்தர்கள் அவருடைய பிள்ளையின் மென்னியைப் பிடித்தனர். அவனும் அதற்குப் பின் வாங்காமல் “என் தந்தையின் ஞாபகங்கள்” என்று தலைப்புப் போட்டுக் கொண்டு தன் ஞாபகத்தில் இல்லாதவற்றையெல்லாம் எழுதித் தள்ளினான்

என்னையும் ஒரு பத்திரிகாசிரியர், அவரைப் பற்றி ஏதாவது எழுதும்படி ரொம்பவும் கேட்டுக் கொண்டார். நானும் சளைக்கவில்லை. “சதானந்தத்தின் சாபம்” - “அவரும் நானும்” என்றெல்லாம் தலைப்புப் போட்டுக் கொண்டு நடந்தது நடக்காதது எல்லாவற்றையும் சாங்கோபாங்கமாக எழுதி வெளுத்துக் கட்டினேன்.

அன்று அவர் பெயரைச் சொல்லி அவரே பிழைக்க முடியவில்லை; இன்றோ அந்த மனிதனின் பெயரைச் சொல்லி எத்தனை பேர் பிழைக்கின்றனர்!

* * *