பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விதி வென்றதா?

ன்று நேற்றல்ல; என்றுமே தன் முதுகில் ஏதாவது சுமந்து கொண்டு வந்தால் தான் சுப்பன் எஜமான் வீட்டுக்குள் நுழைய முடியும். உதய சூரியன் உச்சி வானத்துக்கு வரும் வரை அவன் உள்ளமும் உடலும் சோர வயலில் உழைத்துவிட்டுப் பசிக்குக் கூழ் குடிக்க வந்தால்கூட, அவனுக்கு ‘வரவேற்பு’ வாசலோடுதான்!

இந்தச் சம்பிரதாயத்தை யொட்டி, அன்றும் வாசலில் நின்றபடியே, “அம்மா” என்று இரைந்தான் அவன்.

“யாரடா, அது?” என்று ‘டா’ போட்டுக் கேட்டாள் உள்ளே இருந்த எஜமானியம்மாள்.

வயதில் சுப்பனைவிட அவள் எவ்வளவோ சிறியவன் தான்; ஆனால் ஜாதியில் பெரியவனல்லவா? - அதனால்தான் அந்த ‘டா’

அவன், “நான்தான் அம்மா, சுப்பன்” என்று தன்னைப் பற்றித் தெரிவித்துக் கொள்வதற்குள், வாசலில் நின்று கொண்டிருந்த ரவி, “சுப்பன் வந்திருக்கிறான், அம்மா” என்றான்.

“உழைச்சு ரொம்பக் களைச்சுப் போச்சோ” என்று எரிந்து விழுந்து கொண்டே, எஜமானி சுப்பனுக்கென்றே பிரத்தியேகமாகத் தயாரித்து வைத்திருந்த கூழை ஒரு ஏனத்தில் கரைத்து எடுத்துக் கொண்டு வந்தாள்.

சுப்பன் அடக்க ஒடுக்கத்துடன் அவளுக்கு நேரே இரு கையையும் ஏந்தினான் - அவன் பிச்சைக்காரன் அல்ல; உழைப்பாளி. ஆனாலும் ஏனோ அவனுக்கு அத்தனை அடக்க ஒடுக்கம்!

கூழைக் குடித்துவிட்டு வெளியே போகும்வரை சுப்பனையே கவனித்துக் கொண்டிருந்த ரவிக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, அவன் உள்ளே ஓடோடியும் சென்று தன் அம்மாவிடம் “ஏன், அம்மா சுப்பனுக்கு வீடு, வாசல் ஒன்றுமேயில்லையா?” என்று கேட்டான்.

“ஏண்டா, அப்படிக் கேட்கிறே?”

“இல்லை அம்மா அவன் எப்போது பார்த்தாலும் நம்ம வீட்டு வேலையே செஞ்சுண்டு, நம்ம வீட்டுக் கூழையே குடிச்சுண்டு, நம்ம வீட்டு வாசலில் நாய் மாதிரி காத்துண்டு கிடக்கிறானே, அதனாலே கேட்டேன்?”