பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

விந்தன் கதைகள்

”அவனுக்கு வீடு, வாசல் இல்லாமல் என்னடா? அதோ இருக்கே ஒரு குடிசை. அது தான் அவன் வீடு?”

“ஐயோ! அந்தக் குடிசையில் தீப் பிடித்துக் கொண்டால்....?”

“அவன் எழவுக்கு நாம்தான் வேறே கட்டிக் கொடுக்கணும்!”

“அதற்கில்லை அம்மா அவன் உள்ளேயிருந்தால்?”

“வெளியே வந்துவிடுகிறான்?”

“தூங்கிக் கொண்டிருந்தால்?”

“செத்துத் தொலைகிறான்?”

“அவன் செத்தால் நமக்குக் கஷ்டமில்லையோ?”

“நமக்கென்ன கஷ்டம்?”

“நம்ம வீட்டு வேலையை யார் செய்வா?”

“அதற்கென்ன, எத்தனையோ கழுதைகள் இருக்கு!”

“ஊஹூம் கழுதைகள் கூட நம்ம வீட்டு வேலையைச் செய்யுமா, அம்மா?”

அவள் சிரிக்கிறாள்.

“ஏன்மா சிரிக்கிறாய்?”

“இல்லை, கண்ணே நான் கழுதை என்று நிஜக் கழுதையைச் சொல்ல வில்லை; சுப்பனைப் போன்றவர்களைச் சொன்னேன்!”

“இதென்ன அம்மா சுப்பனைப் போன்றவர்களெல்லாம் கழுதைகளா?”

“இல்லையா? அவர்களெல்லாம் உருவத்தில் மட்டும் தான் மனிதர்களாயிருக்கிறார்களே தவிர, காரியம் செய்வதில் கழுதைகள்தான். இட்ட வேலையைச் செய்வது; வைத்த தீனியைத் தின்பது இவற்றைத் தவிர அந்தக் கழுதைகளுக்கும் வேறு வேலையில்லை; இவர்களுக்கும் வேறு வேலை கிடையாது!”

“அவர்கள் ஏன் அம்மா அப்படி இருக்கிறார்கள்?”

“அது அவர்களுடைய விதி!”

“விதி என்றால் என்ன அம்மா?"