பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிறைப் பறவை

"திருடுவதென்பது அவ்வளவு எளிதல்ல; அதிலும் எத்தனையோ தொல்லைகள் இருக்கத்தான் இருக்கின்றன!"

மூன்று முறைகள் சிறைவாசம் செய்த பிறகு இந்த முடிவுக்கு வந்தான் முத்து.

அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு திருடவேண்டும்; அகப்பட்டுக்கொண்டால் அடி, உதைக்குத் தயாராக வேண்டும் அதற்கு மேல் விசாரனை, தண்டனை எல்லாம்!

விசாரணை என்றால் என்ன விசாரணை?' 'ஏன் திருடினான்; எதற்காகத் திருடினான்?' என்றா விசாரிக்கிறார்கள்? அப்படி விசாரித்தால்தான் பெரும்பான்மையான வழக்குகளில் அரசாங்கமே குற்றவாளியாகி, குற்றவாளி நிரபராதியாகி விடுவானே? அதனால்தான் ஒருவன் திருடினான் என்றால், 'அவன் திருடியது உண்மைதானா?' என்று மட்டுமே விசாரிக்கிறார்களோ, என்னமோ?

'தண்டனை, தண்டனை' என்கிறார்களே, அந்தத் தண்டனை மட்டும் என்ன வாழுகிறதாம்? - திருந்துவதற்கா தண்டனை, திருடனுக்கு? இல்லை, அதில் அவன் பயிற்சி பெறுவதற்கு! இல்லையென்றால் முதலில் மூன்று மாதம், பிறகு ஆறு மாதம், அதற்குப் பிறகு ஒரு வருஷம், இரண்டு வருஷம் என்று ஆயுள் முழுவதையும் சிறைவாசத்திலேயே கழித்துவிடுகிறார்களே சில திருடர்கள், அதற்கு என்ன அர்த்தமாம்? - சிறை வாசத்தில் அவர்கள் பெற்ற பயிற்சி என்றுதானே அர்த்தம்?

எது எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும் - இனி, தான் திருடக்கூடாது - ஆம்; அவளுக்காகவாவது இனி, தான் திருடவே கூடாது!

அதைவிட அரை வீசை சிகைக்காய் வாங்கி அரைக்கலாம்; அரைத்த சிகைக்காய்ப் பொடியில் ஆறு படி அரிசித் தவிட்டையோ, அரக்குப் பொடியையோ வாங்கிக் கலக்கலாம்; ஆயிரமாயிரம் காலணா, அரையணா பொட்டணங்களாக அவற்றைக் கட்டலாம்; 'முத்து விலாஸ் சிகைக்காய்ப் பொடி தான் உலகத்திலேயே முதன்மையானது!' என்று கூசாமல் விளம்பரமும் செய்யலாம்; அதன் வாயிலாக லட்சக் கணக்கான ரூபாய்களுக்கு அதிபதியாகி, அந்த