பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

விந்தன் கதைகள்

ரூபாய்களைக் கொண்டே அரசியல், கலை, இலக்கியப் பிரமுகராகி, 'பாரதரத்னா' பட்டத்தைக்கூடப் பெற்றுவிடலாம்.

அரசியலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்று எந்த அரசியல்வாதியாவது என்னைக் கேட்பானா? கலைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்று எந்தக் கலைஞனாவது என்னைக் கேட்பானா? இலக்கியத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்று எந்தப் புலவனாவது என்னைக் கேட்பானா?. ஊஹும், என்னைப் பார்க்கும்போதெல்லாம் தலையைச் சொறிந்து கொண்டும், கையைப் பிசைந்து கொண்டுமல்லவா நிற்பார்கள்?-தூ! மனிதர்களா இவர்கள்? 'ஆறாவது அறிவு' என்று ஏதோ ஒன்று இருக்கிறதாமே - அது இருக்கிறதா, இவர்களுக்கு ஊஹும், எனக்கு நம்பிக்கை இல்லை; இல்லவே இல்லை.

இப்படிப் பிழைப்பதும் ஒருவகையான திருட்டைச் சேர்ந்ததுதான் என்றாலும், இதற்கு விசாரணை கிடையாது, தண்டனையும் கிடையாது. அப்படியே இருந்தாலும் இருக்கவே இருக்கிறது 'சம்திங்' - அந்த 'அருமருந்’தைக் கொடுத்து ஒரே அமுக்காக அமுக்கி விடலாம் - என்ன இருந்தாலும் வியாபாரத்தில் நாணயம் வேண்டும் என்று சிலர் சொல்லலாம். உண்மைதான்; நாணயம் 'நாணய'த்தில் வேண்டும்தான்! சரக்கில் அது எதற்கு? - 'வேண்டாம்' என்பதற்காகத் தானே ராஜாங்கத்தில் 'ராஜதந்திரம்' என்று ஒன்று இருப்பதுபோல வியாபாரத்தில் 'வியாபார தந்திரம்' என்று ஒன்று இருக்கிறது?'

ஆனால் இதுபோன்ற 'திருட்டுத் தொழில்'களுக்கு முதல் வேண்டும்; அந்த முதலுக்கு எங்கே போவது?

இதுவரை 'முதல் இல்லாத திருட்டுத் தொழிலைச் செய்து வந்த தனக்குத் தெரிந்த ஒரே வழி திருடுவதுதான்! அதையா மறுபடியும் ஆரம்பிப்பது? - சேச்சே, திருடுவதற்குச் சட்ட ரீதியான வழிகள் எத்தனையோ இருக்க, சட்ட விரோதமாகத் திருடுவானேன்?-கூடாது; கூடவே கூடாது.

முதலில் ஏதாவது ஒரு வேலை தேடிக் கொள்ளவேண்டும்; அந்த வேலையைக் கொண்டு ஏதாவது ஒரு வியாபாரத்துக்கு வேண்டிய முதலைத் தேடிக் கொள்ள வேண்டும் - அதற்குப் பிறகு? - நானும் அவளும் ஜோடி; வானில் பறக்கும் வானம்பாடி?

இப்படி நினைத்ததும் தனக்குத்தானே சிரித்து கொண்டான் அவன்.