பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைப் பறவை

427

"இன்னா வாத்தியாரே, சிரிக்கிறே?"

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் முத்து. கேட்டது வேறு யாருமல்ல; அவனுடைய சீடன் அபேஸ் அய்யாக்கண்ணு.

"டேய், அய்யாக்கண்ணு மரியாதையா சொல்றேன்-இனிமே நீ என்னை ‘வாத்தியாரே கீத்தியாரே’ன்னு கூப்பிடக்கூடாது-ஆமாம், சொல்லிட்டேன்!"

"ஏன் வாத்தியாரே, அப்படி?"

"இனிமே நான் திருடப் போவதில்லே!"

இதைக் கேட்டதும் 'இடியிடி'யென்று சிரித்தான் அவன்.

"ஏண்டா, இளிக்கிறே?"

"இல்லே வாத்தியாரே, என் அம்மாகூட இப்படித்தான் சொன்னாளாம்!"

"எப்படி?"

"என்னைப் பெறப்போ, 'இனிமே நான் பிள்ளையே பெறப்போவதில்லேன்னு சொன்னாளாம். அப்புறம் என்னடான்னா, எனக்குப் பின்னாலே ஏழு பேரு; எட்டாவது பிள்ளை 'அண்டர் ப்ரொடக்ஷன்'லே!"

"அடடே இங்கிலீஷ்லே பேசக்கூடக் கத்து கிட்டியா, நீ?"

"எல்லாம் நீ குடுத்த பிச்சைதானே வாத்தியாரே?"

இந்தச் சமயத்தில் அங்கே வந்த காவலன் கந்தசாமி, "அட, முத்துவா! எப்போடா வந்தே, ஜெயில்லேருந்து?" என்று கேட்டான் வியப்புடன்.

"இன்னிக்குத்தான்!" என்றான் முத்து.

"நல்ல நாளும் அதுவுமாத்தான் வந்திருக்கே!"

"இன்னா இன்னிக்கு அப்படிப்பட்ட நல்ல நாளு?"

"மயிலாப்பூரிலே அறுபத்துமூவர் திருநாளாச்சேடா, இன்னிக்கு! உனக்குத் தெரியாதா? போபோ, சீக்கிரம் போ! ஏதாச்சும் கெடச்சா என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ"

"உங்களைக் கவனிக்க வேண்டியதுதான்! வாங்கறதையும் வாங்கிக்குவீங்க, ஆளையும் காட்டிக் கொடுத்திடுவீங்க இல்லே? உங்களை அவசியம் கவனிக்க வேண்டியதுதான்!"