பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைப் பறவை

433

தெரிந்துவிட்டிருக்கிறது. தினம் இரண்டு பேராவது வந்து, 'இந்த வண்டியை எனக்குக் கொடுத்துவிடுங்கள், இந்த வண்டியை எனக்குக் கொடுத்துவிடுங்கள்!' என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போட்டியில் நீ வெல்ல வேண்டுமானால் முப்பதாம் தேதி மாலை ஆறு மணிக்குள் ரூபா பத்து கொண்டு வந்து முன் பணமாகக் கட்டிவிடவேண்டும் - என்ன, முடியுமா?"

"அட, கடவுளே! முப்பதாம் தேதிக்கு இன்னும் பத்து நாட்கள் தானே இருக்கின்றன?"

"ஏன் முடியாதா? - முடியாதென்றால் சொல்லி விடு; வேறு யாருக்காவது கொடுத்துவிடச் சொல்கிறேன்"

"முடியுமென்றால்?"

"அண்ணன்-தம்பி என்று சொல்லி, எனக்குப் பதிலாக உன்னை நான் அங்கே வைத்துவிடுவேன்!"

"சரி, உன் விலாசத்தைக் கொடு; முப்பதாம் தேதிக்குள் உன்னை நான் முன் பணத்துடன் வந்து பார்க்கிறேன்"

"என் விலாசம் எதற்கு? நீ என் கம்பெனி விலாசத்துக்கே வந்துவிடலாமே?" என்றான் அவன்.

"சரி!" என்று கிளம்பினான் முத்து.

நாளை தேதி முப்பது! - உணவு விஷயத்தில் ‘ஒட்டகத்தின் முறை'யைக் கையாண்டு இன்றுவரை எப்படியோ எட்டரை ரூபா சேர்த்து விட்டான் முத்து. இன்னும் ஒன்றரை ரூபா வேண்டுமே? நாளை ஒரே நாளில் கிடைத்து விடுமா, அது?. கிடைக்காவிட்டால்.......

அந்த வேலை மட்டுமா கிடைக்காமல் போய் விடும், தனக்கு? அவளுமல்லவா கிடைக்காமல் போய் விடுவாள்? - அதற்குப் பிறகு நாலு பேரைப் போலத் தானும் நாணயமாக வாழ்வதுதான் எப்படி?

'எதற்கும் முயன்று பார்ப்போம்?' என்று எண்ணித் துணிந்தவனாய், அன்று ஊரடங்கும் வரை தெருத் தெருவாய்ச் சுற்றிக்கொண்டிருந்துவிட்டு, வழக்கம்போல் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்குத் திரும்பினான் படுக்க!

வி.க.-28