பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

விந்தன் கதைகள்

ஆம், செத்த பிறகு போக வேண்டிய இடத்திற்கு அவனைப் போன்றவர்கள் உயிரோடிருக்கும் போதே போய்விடுவார்கள்!-'ஏன்?' என்று கேட்கிறீர்களா?- வேறு எங்கேயாவது படுத்தால்தான், 'நீ யார், எந்த ஊர், எங்கே வந்தாய், என்ன செய்கிறாய்?' என்றெல்லாம் குடைந்து குடைந்து கேட்டு, அவனைச் சந்தேகத்தின் பேரால் உள்ளே தள்ளி விடுவார்களே!

இந்த ஆபத்திலிருந்து தன்னைக்காத்து வந்த அந்தச்சுடுகாட்டை அன்று அவன் அடைந்தபோது மணி பத்துக்கு மேல் இருக்கும் அவனை எதிர் பார்த்து அங்கே காத்துக்கொண்டிருந்த 'ஓசிப் பீடித்தோழர்' ஒருவர், "என்ன அண்ணாச்சி, இன்னிக்கு இம்மா நேரம்" என்றார் கொட்டாவி விட்டுக் கொண்டே.

அவர் கேட்பதற்கு முன்னால் அவரிடம் ஒரு பீடியை எடுத்து நீட்டிவிட்டு, "ஒண்ணரை ரூபா காசுக்காக ஊரடங்கும் வரை சுற்றினேன்; ஒண்ணும் கெடைக்கல்லே!" என்றான் முத்து.

"எழும்பூர் ஸ்டேஷன் பக்கம் போய்ப் பார்க்கிறதுதானே?"

"அங்கேதான் ஏகப்பட்ட 'போர்ட்டர்'கள் இருப்பானுங்களே?"

"அவனுங்க கைவரிசையெல்லாம் ஸ்டேஷனுக்குள்ளேதான்; நீ வெளியே போய் நின்று பாரு!"

"வெளியேதான் டாக்ஸி, ஆட்டோ, ஜட்கா, ரிக்ஷான்னு எத்தனையோ இருக்கே, அத்தனையையும் விட்டுட்டா என்னைத் தேடி வரப் போறாங்க?"

"உனக்குத் தெரியாது அண்ணாச்சி! அத்தனை வண்டி அங்கே இருந்தும் காலை நேரத்திலே அவசரத்துக்கு ஒரு வண்டிகூடக் கெடைக்காம அவதிப் படறவங்க அங்கே ரொம்பப் பேரு!"

"சரி, அதையும் பார்த்து விட்டால் போச்சு!" என்றான் முத்துவும் கொட்டாவி விட்டுக் கொண்டே.

அதற்குமேல் இருவரும் பேசவில்லை; பேசினால் தன்னிடமுள்ள எட்டரை ரூபா விஷயம் எங்கே தன்னையும் அறியாமல் வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் அவனுக்கு! - மாஜி திருடனாயிருந்தாலும் திருட்டுப் பயம் அவனை மட்டும் விட்டுவிடுமா, என்ன?