பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைப் பறவை

437

ஆயிற்று - மணி ஐந்து முப்பத்தைந்து, ஐந்து நாற்பது, ஐந்து நாற்பத்தைந்தும் ஆயிற்று.......

பதினைந்து நிமிஷமாவது வேண்டாமா, ஹிமாலயா ஐஸ்-கிரீம் கம்பெனிக்குச் செல்ல?

வேண்டும்தான்!-ஆனால் அதற்குள் அந்த நாலணா, ஒரே ஒரு நாலணா தனக்குக் கிடைத்து விடுமா?

நம்பிக்கை கைவிட்டாலும், நப்பாசை அவனைக் கைவிடவில்லை - ஓடினான்; தேடினான் - அந்த ஒன்பதே முக்கால் ரூபாய்க்கு மேல் ஒரு காசும் சேரவில்லை!

டிங், டாங்! டிங், டாங்! டிங், டாங்! - தன்னை மறந்து திரிந்து கொண்டிருந்த முத்துவை மாதாக் கோயிலின் மணியோசை தடுத்து நிறுத்தியது-இனி பிரயோசனமில்லை; இனி அந்த நாலணா, ஒரே ஒரு நாலணா கிடைத்தும் பிரயோசனமில்லை!

அவன் போய்விட்டிருப்பான்; அவனுடைய வேலையும் அவன் கையை விட்டுப் போய்விட்டிருக்கும்......

வெறுப்பு ஒரு பக்கம்; வேதனை இன்னொரு பக்கம்-இந்த இரண்டும் சேர்ந்தாற்போல் தன் இயத்தில் கொதித்து எழுந்த வேகத்தில் அவன் அந்த உல்லாசப் பேர்வழியை மட்டுமா, உலகத்தையே சபித்தான் - பாவம், உலகம் என்ன செய்யும்?- 'திருடுவதற்கு எத்தனை சந்தர்ப்பங்கள் வேண்டுமானாலும் அளிப்பேன்; திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பங்கூட அளிக்க மாட்டேன்' என்று மனிதன் ஒற்றைக் காலில் நிற்கும்போது!

ளிதில் சமாளித்துக்கொள்ள முடியாத ஏமாற்றத்துடன் கால்கள் போன வழி நடந்து வந்த முத்துவை, சினிமா தியேட்டர் ஒன்று கவர்ந்து இழுத்தது - அடேயப்பா! என்ன கூட்டம், என்ன கூட்டம்! - வெறும் நிழலைப் பார்த்து மயங்க இத்தனை கூட்டமா?

ம், எதுவாயிருந்தால் என்ன? - பொழுது சீக்கிரம் போக மாட்டேன் என்கிறது இவர்களுக்கு! ஆனால் தன்னைப் போன்றவர்களுக்கோ? - அதே பொழுது சீக்கிரம் போய்விடுகிறது!

விஷயம் ஒன்றுதான்; ஆனால் வித்தியாசம்?